“சமி.. என்ன மாதிரியான ஆளுப்பா நீ.. வித்தை காட்ற!” – அக்தர் மனம் திறந்த பேச்சு!

0
1030
Shami

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 397 ரன்கள் குவித்தது.

இந்திய அணி பெரிய ரன்கள் குவித்திருந்த பொழுதும் கூட, நியூசிலாந்து அணியின் பக்கமாக ஆட்டம் 41 ஓவர்கள் வரையில் இருந்தது. அந்த நேரம் வரை வெற்றி யாருக்கு என்பதில் ஒரு தடுமாற்றம் நீடித்துக் கொண்டே வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும்பொழுது முதல் இரண்டு விக்கெட்டுகளை சமி கைப்பற்றினார். பிறகு வில்லியம்சன், மிட்சல் பெரிய பார்ட்னர்ஷிப் உருவாக்கிய பொழுது, அந்த இடத்திலும் வந்து மீண்டும் இரண்டு விக்கெட்டுகளை சமி கைப்பற்றினார்.

மேலும் நிலைத்து நின்று சதம் அடித்து விளையாடி மிரட்டி கொண்டிருந்த மிட்சலை சமியே வெளியேற்றி இந்தியா பக்கம் ஆட்டத்தை முழுமையாக மாற்றினார். மேலும் கடைசிக் கட்ட நியூசிலாந்து விக்கெட்டுகளில் இரண்டையும் கைப்பற்றினார்.

நேற்றைய போட்டியில் 9.5 ஓவர்கள் பந்து வீசி, 57 ரன்கள் தந்து, ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இதுவே சிறந்த பந்துவீச்சு. மேலும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இதுவே சிறந்த பந்துவீச்சு.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி இருக்கிறார். மொத்தமாக மூன்று ஆட்டநாயகன் விருது வாங்கி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட் கைப்பற்றியவராகவும் இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியவராகவும் இருக்கிறார். நேற்று மட்டும் மொத்தமாக 10 சாதனைகள் சமி பந்துவீச்சில் படைத்திருந்தார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் அடைய விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள முகமது சமி இந்திய அணியின் வெற்றிகளில் கொடுத்து வரும் தாக்கம் என்பது, இவரை ஏன் இதற்கு முன்பே ஆட வைக்காமல் விட்டு விட்டோம் என்று இந்தியா அணி நிர்வாகம் வருத்தப்படும் அளவிற்கு இருக்கிறது.

சமி பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் கூறும் பொழுது ” சமி என்ன மாதிரியான ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். அவர் என்ன மாதிரியான ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். அவருக்கு கிடைக்கும் அத்தனைக்கும் அவர் தகுதியானவர். அவர் பந்தின் தையலை ஆடுகளத்தில் அடித்து வித்தை காட்டுகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டன் ஆகவும் அனைத்து புகழும் ரோகித் சர்மாவுக்கு சேரும். ஆரம்பத்திலேயே ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடி எதிரணியை பின்னுக்கு தள்ளி விடுகிறார். கில்லுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் அவரும் சதம் அடித்திருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!