ராகுலை வெளியே அனுப்புங்க ; இந்த மூன்று பேரைக் கொண்டு வாங்க; ஹர்பஜன்சிங் அதிரடி கருத்து!

0
1051
Harbajan singh

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு துவக்க ஜோடி ஒரு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. துவக்க ஆட்டக்காரர்களில் கே எல் ராகுல் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரது மனநிலை இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெரிய நெருக்கடியைத் தருகிறது. இதனால் ரன் அழுத்தத்தில் விழும் ரோஹித் சர்மா பந்தை அடிக்கப்போய் ஆட்டம் இழந்து விடுகிறார்!

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களில் கேஎல் ராகுல் பாகிஸ்தான் தென்னாபிரிக்க அணிகளுடன் சிறப்பாக செயல்படவில்லை என்பதை தாண்டி, இரண்டாவது போட்டியாக நடைபெற்ற நெதர்லாந்து அணி உடன் நடந்த போட்டியிலும் அவரது பேட்டிங் அணுகுமுறை சரியாக இல்லை.

கே எல் ராகுல் தவறான ஷாட்களுக்கு போய் ஆட்டம் இழந்தால் கூட அவர் அடிக்க போய் ஆட்டம் இழப்பது நல்ல நம்பிக்கையைத் தைரியமான அணுகுமுறையைக் காட்டும். ஆனால் அவர் பந்திற்குப் பயந்து பயந்து போய் விளையாடுவது அவர் முழுதான நம்பிக்கையோடு விளையாடவில்லை என்பதை காட்டுகிறது. இதுதான் அவரது விஷயத்தில் பெரிய பின்னடைவாக இருக்கிறது.

தற்பொழுது கே எல் ராகுல் அணியில் நீடிப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசும்பொழுது ” இந்திய அணியினர் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அணி முன்னோக்கி செல்வதை பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும். ராகுல் ஒரு சிறந்த வீரர் மேட்ச் வின்னர். ஆனால் அவரது தற்போதைய பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இல்லை அவர் மிகவும் தடுமாறுகிறார். எனவே அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கார்த்திக் காயத்துடன் இருக்கிறார் அவரது நிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவர் இல்லையென்றால் கூட ரிஷப் பண்ட் ரோஹித் சர்மா உடன் சேர்ந்து ஆட்டத்தைத் துவங்கலாம். உங்களுக்கு இடது வலது காம்பினேஷன் கிடைக்கும். நீங்கள் தீபக் ஹூடாவையும் கொண்டு வரலாம். அவரும் சில ஓவர்கள் வீசுவார்” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” அஸ்வினுக்கு பதிலாக சாகலை கொண்டு வர வேண்டும். அவர் விக்கெட் வீழ்த்தும் ஒரு பந்துவீச்சாளர். அவர் இரண்டு மூன்று விக்கெட்டுகள் எடுக்கும் பொழுது அவர் தருகின்ற ரன்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. சாகல் ஒரு மேட்ச் வின்னர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார் ” என்று கூறியுள்ளார்!