முதல் 10 ஓவர்லயே தோத்தாச்சு! அப்புறம் என்ன? – சேவாக் விளாசல்!

0
3202
Sehwag

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மிக மோசமான ஒரு நாளாக அமைந்தது!

அடிலைடு மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை நேற்று இந்திய அணி எதிர்கொண்டது. ஏற்கனவே நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை அபாரமாக வென்று பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் காத்திருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வழக்கம் போல் இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல ஆட்டத்தைத் தரவில்லை. அதேபோல் வழக்கம்போல் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா விளையாட இந்திய அணிக்கு 168 என்ற கௌரவமான ஸ்கோர் வந்தது.

முதல் பாதியில் ஏதோ தப்பி பிழைத்தது போல் தெரிந்த இந்திய அணிக்கு, ஆட்டத்தில் இரண்டாவது பாதி பந்துவீச்சில் பேரிடி விழுந்தது. இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சேர்ந்து இந்திய பந்துவீச்சை நொறுக்கி தள்ளி விட்டார்கள். இருவரும் சேர்ந்து மொத்தம் பத்து சிக்ஸர் 13 பவுண்டரி விளாசி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று இந்திய அணியை 16 ஓவர்களில் வீழ்த்தி விட்டார்கள்.

10 விக்கெட் வித்தியாசத்தில் வந்த இந்த படுதோல்வி இந்திய அணி மீதான விமர்சனத்தையும் கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனத்தையும் எக்கச்சக்கமாகக் கூட்டி இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் இது குறித்த தன் கருத்துக்களையும் கொஞ்சம் காட்டமாகவே தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது ” டாப் ஆர்டரில் 12 ஓவரில்
77 ரன்கள் மட்டுமே எடுக்கும் பொழுது, மீதமுள்ள பேட்டர்கள் உள்ளே வந்து எட்டு ஓவரில் பயமின்றி விளையாடிய 100 ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியானது அல்ல. இந்த மைதானத்தில் சராசரி இலக்கு 150 முதல் 160 என்றால் அதைவிட கொஞ்சம் அதிகமாகவே பெற்றோம். ஆனால் இப்படியான ஆடுகளத்தில் ஒரே ஒரு பேட்ஸ்மேன் நின்றால் ஆட்டம் தலைகீழாக மாறிவிடும். இந்தியாவில் சென்னை, வான்கடே, பெரோஷா கோட்லா போன்ற மைதானங்களில் இப்படி நடந்து நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் சராசரி இலக்கை வைத்துக்கொண்டு நாம் வெல்ல முடியாது ” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட வழியில் அதிரடியாக விளையாடியது. ஆனால் அரை இறுதியில் அவர்கள் அதை மீண்டும் செய்யவில்லை. இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்தியா சரியான ரன்னை அடித்து பந்து வீச்சால் தோற்றது என்று நினைத்தால், நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். முதல் 10 ஓவர்களில் நாங்கள் எதிர்பார்த்த ரன்னை எங்கள் பேட்ஸ்மேன்கள் கொண்டு வராத காரணத்தால்தான் நாங்கள் தோற்றோம் ” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்!