டி20 உலக கோப்பைக்கு டிக்கெட் போடுங்க.. சிவம் துபேவால் அவங்க 4 பேருக்கு சிக்கல்தான் – சேவாக் மற்றும் யுவராஜ் பாராட்டு

0
3297

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் சிவம் தூபேவின் அதிரடி ஆட்டம் இந்திய முன்னாள் ஜாம்பவான்கள் விரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் கவனத்தை பெரிதாக ஈர்த்துள்ளது.

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்ததால் சென்னை அணியின் பேட்ஸ்மேன் ரன்கள் குவிக்க மிகவும் சிரமப்பட்டனர். பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை அவ்வப்போதுதான் பார்க்க முடிந்தது. இருப்பினும் அதிரடியாக விளையாடப் போய் விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால், சென்னை அணி சிக்கலில் தத்தளித்தது.

- Advertisement -

ஏழு ஓவர்களில் 54 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆல்ரவுண்டர் சிவம் தூபே களம் இறங்கினார். இந்த நிதானமான பேட்டிங் வரிசையில் பவர் ஹிட்டரான சிவம் தூபே 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 45 ரன்கள் விளாசினார். மேலும் இந்த ரன்களை 187 ஸ்ட்ரைக் ரைட்டில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் சிவம் தூபே மொத்தமாக விளையாடிய நான்கு போட்டிகளில் 148 ரன்களை 160.87 ஸ்ட்ரைக் ரைட்டில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளில் விளையாடிய சிவம் தூபே பேட்டிங்கில் பெரிதாக பங்களிப்பு அளிக்கவில்லை.

சேவாக் மற்றும் யுவராஜ் பாராட்டு

அதற்குப் பின்னர் சென்னை அணிக்கு வந்த பின்னர் கடந்த சிலசீசன்களாகவே இவரது பேட்டிங்கில் பெரிதும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவர் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சிறந்த அதிரடியான பங்களிப்பையே வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். எனவே இவரை வரும் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் யுவராஜ் சிங் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது
“அவர் சிரமமின்றி எளிதாக பேட்டிங் செய்யும் விதம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. அவர் உலகக் கோப்பையில் இடம் பிடிக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். கேம் சேஞ்சர் ஆக திறமை பெற்றுள்ளார். ஆட்டத்தை மாற்றும் சக்தி அவரிடம் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “சிவம் துபே விளையாடும் விதத்தை பார்க்கும் பொழுதே டி20 உலக கோப்பைக்கான அவரது டிக்கெட்டை உறுதிப் படுத்த வேண்டும் என்று நான் சன்ரைசர்ஸ் அணியின் போட்டிக்கு முன்பாகவே கூறினேன். அவர் ரிஷப் பந்த், சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்துள்ளார். உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க நிலையான ரன்கள் குவிக்க வேண்டும். எனவே ஃபார்மில் இருக்கும் வீரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:மொயின் அலி விட்ட கேட்ச் இல்ல.. சிஎஸ்கே தோல்விக்கு உண்மையான காரணம் இதுதான் – ஸ்டீபன் பிளமிங் அதிரடி பேட்டி

மிடில் ஆர்டரில் களமிறங்கி சிவம்தூபே விளையாடும் விதம் வீரேந்திர சேவாக் கூறியதைப் போல இந்தியாவின் நான்கு முன்னணி வீரர்களுக்கு சற்று அதிக அழுத்தத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.