தொடர்ந்து இரண்டாவது முறையாக 200 ரன்கள்; உ.பியை சுருட்டி வீசிய டெல்லி!

0
527
WPL

பெண்கள் ஐபிஎல் தொடரில் ஐந்தாவது ஆட்டத்தில் இன்று டிஒய் பாட்டில் மைதானத்தில் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின!

டெல்லி அணிக்கு இந்த தொடரில் இது இரண்டாவது போட்டியாகும். அதேபோல் உத்தரப் பிரதேச அணிக்கும் இது இரண்டாவது போட்டியாகும். இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது!

- Advertisement -

டெல்லி அணிக்கு முதல் ஆட்டத்தில் மிகச் சிறப்பான துவக்கம் தந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தற்போதைய டெல்லி அணியின் கேப்டனுமான மெக் லானிங் மற்றும் இந்திய அணி வீராங்கனை ஷபாலி வர்மா இருவரும் இணைந்து முதல் விக்கட்டுக்கு 6.3 ஓவரில் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். செபாலி வர்மா 14 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதற்கு அடுத்து வந்த மரிசானா கேப் 12 பந்தில் இரண்டு பவுண்டரிகள் உடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து கேப்டன் மெக் லானிங் உடன் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்டரிக்யூஸ் இணைய, லானிங் ஆட்டம் சூடு பிடித்தது. 42 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்து இந்த தொடரில் இரண்டாவது தனது அரை சதத்தை பதிவு செய்து ஆட்டம் இழந்தார். இந்தத் தொடரில் 142 ரன்கள் சேர்த்து அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியைத் தன் வசப்படுத்தினார். இவருக்கு அடுத்து வந்த அலைஸ் கேப்சி அதிரடியாக 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜெமிமா உடன் ஜோடி சேர்ந்த ஜோனசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 20 பந்துகளை சந்தித்த ஜோனசன் தலா மூன்று பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜெமிமா 22 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் 223 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இதற்கு அடுத்து களமிறங்கிய உத்தரப்பிரதேச அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் உத்தர பிரதேச அணியின் கீப்பரான அலேசா ஹீலி பவுண்டரிகளால் அதிரடி துவக்கம் தந்தார். ஆனால் அவரது அதிரடி துவக்கத்திற்கு ஏற்றார் போல் யாரும் உடன் சேர்ந்து விளையாடவில்லை. அவரும் ஐந்து பவுண்டரிகள் உடன் 17 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதன் பிறகு உத்தரப்பிரதேச அணிக்கு 30 ரன்களை ஒருவர் கூட தரவில்லை. அதே சமயத்தில் களத்தில் நின்ற ஆஸ்திரேலியா வீராங்கனை டாலியா மெக்ராத் அதிரடியில் டெல்லி பந்துவீச்சாளர்களை மிரட்டினார். அவரது அதிரடி டெல்லி அணிக்கு வெற்றியை வாய்ப்பை எந்த இடத்திலும் உருவாக்கவில்லை. கடைசி ஐந்து ஓவர்களுக்கு 90 ரண்களுக்கு மேல் தேவைப்படுகின்ற நிலைதான் இருந்தது.

இப்படியான நிலையிலும் டாலியா மெக்ராத் ரன் ரேட் படுபாதாளத்தில் வீழ்வதை தடுக்க அதிரடியாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் பதினோரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 90 ரன்கள் குவித்து களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை உத்தரப்பிரதேச அணி சேர்த்தது. இதனை அடுத்து டெல்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பெற்றது. உத்தரப்பிரதேச அணி முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது.