” ஜிம்பாப்வேற்கு எதிராக விராட் கோலி அடிக்கும் மலிவான சதம் எதற்கும் உதவாது ” – ஸ்காட் ஸ்டைரிஸ்

0
694
Scot styris on virat kohli

இந்திய அணியின் ரன் மெசின் விராட் கோலிக்கு இது கிரிக்கெட்டில் மிகக் கடினமான காலமாக இருக்கிறது. அவர் கிரீஸில் நிற்கும் முறையை மாற்றி, சில பந்துகளைத் தவிர்ப்பது என அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கூட, சாதாரண பந்துகளில் ஆட்டமிழக்கும் வகையில் அவரது பேட்டிங் பார்ம் இருக்கிறது!

இதனால் கிரிக்கெட் வட்டாரங்களில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து ஆதரவு எதிர்ப்பு என பல குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விவாதங்களைக் கிளப்பியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “பார்ம் என்பது ஏறும் இறங்கும். தரம் என்பதுதான் நிரந்தரம். விராட் கோலி தரமான வீரர். அவருக்கு அணி எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று கூறி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தார். ஆனால் விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை!

- Advertisement -

இப்படி விவாதங்கள் ஓயாததிற்கு விராட் கோலியின் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களும், அதில் அவர் எடுத்த ரன்களும், ஆட்டமிழந்த முறைகளும் முக்கியக் காரணமாக அமைந்தது. இங்கிலாந்து உடன் சிவப்புப் பந்தில் இரண்டு இன்னிங்ஸில் 31 ரன்களும், வெள்ளைப்பந்தில் நான்கு போட்டிகளில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தார்!

இதன் காரணமாக அவருக்கு ஆதரவாக எழுந்த குரல்களில் பலர் அவருக்கு ஓய்வு தரவேண்டுமென்று கூறினர். இதனை அடுத்து அவருக்கு வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதம் நடுவில் இளம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேற்குச் செல்ல இருக்கிறது. இந்தத் தொடரில் விராட் கோலி இடம்பெற்று விளையாடுவது அவர் திரும்ப வருவதிற்கு மிகப்பெரிய உதவியாக இருக்குமென்று பிசிசிஐ கருத்து தெரிவித்திருந்தது. இதுகுறித்து இறுதி நேரத்தில் முடிவு எடுக்கப்படுமெனவும் அறிவித்து இருந்தது!

இந்த நிலையில் விராட் கோலியை ஜிம்பாப்வேற்கு அனுப்புவது தொடர்பாக அதிரடியான ஒரு கருத்தை நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் “விராட் கோலிக்கு இது தோல்வியான காலம். அவர் ஒரு முழு ஓய்வில் இருந்து வரவேண்டுமென நான் விரும்புகிறேன். வருகின்ற டி20 உலகக்கோப்பைக்கு ஒரு அணி தயாராக இருப்பதில் ராகுல் டிராவிட்டின் பங்கு மிக முக்கியமானது. ஜிம்பாப்வேற்கு எதிரான தொடரில் விராட் கோலி பங்கேற்றால் ஒரு மலிவான சதம் வரலாம். அது அவருக்கு நம்பிக்கையும் தரலாம். ஆனால் அது அவர் மீண்டு வருவதற்கு உதவாது. அவருக்கு ஓய்வுதான் முக்கியம். இந்திய அணியின் மிக முக்கியமான மனிதராக நான் அவரை இப்போதும் பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -