“இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக இந்த வீரர் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” – ஸ்காட் ஸ்டைரிஸ்!

0
158
Scot styris

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து யோசிக்கும் பொழுது, அவரின் காயம் அவரை தொடர்ந்து விளையாட விடுமா? அவரின் கிரிக்கெட் எதிர்காலம் அவ்வளவுதானா? என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருந்தது!

முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்டிக் பாண்டியா கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால் அவரால் பழையபடி பேட்டிங் பவுலிங்கில் களத்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஒரு ஆல்ரவுண்டர் என்பதிலிருந்து பேட்ஸ்மேன் எனும் நிலைக்கு இறங்கினார். மேலும் பேட்டிங்கிலும் அவரால் பழையபடி அதிரடியாய் விளையாட முடியவில்லை. இந்திய அணியும் அந்த உலகக் கோப்பையில் மோசமாக தோற்று முதல் சுற்றோடு வெளியேறியது.

- Advertisement -

அடுத்து ஹர்திக் பாண்டியா தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. ஓய்வை கேட்டு வாங்கிய ஹர்திக் பாண்டியா தனது உடற் தகுதியை மேம்படுத்த கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி அவரை தக்க வைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்த குஜராத் அணி அவரை ஏலத்திற்கு முன்பே வாங்கியதோடு கேப்டனாகவும் அறிவித்தது. ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் பவுலிங் கேப்டன்சி என மூன்றிலும் முன்னின்று அணியை வழிநடத்தி கோப்பையையும் வென்று கொடுத்தார்.

இதையடுத்து அயர்லாந்து சென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டது. அந்தத் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தொடரை வென்றார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஐந்தாவது டி20 போட்டியின் போது கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட, தற்காலிக கேப்டனாக ஹர்டிக் பாண்டியாவே நியமிக்கப்பட்டார். அந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை வென்றார்.

அப்பொழுது இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அப்படி பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்று செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் எங்களுக்கு இப்பொழுது ஒரு உலககோப்பை வருகிறது அதில் நாங்கள் ஒரு அணியாக இணைந்து செயல்பட வேண்டியது தான் முக்கியம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஹர்திக் பாண்டியா வை இந்திய அணியில் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ” தற்பொழுது அவருக்கு கேப்டன் பதவி தருகிறார்கள் தரவில்லை, அவர் துணை கேப்டனாக இருக்கிறார் இல்லை என்பது எனக்கு ஒரு பொருட்டில்லை. இந்திய அணி எதிர்காலத்தில் எந்த விதத்தில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றபடி எல்லாம் நடக்கும். ஆனால் ஆர்டிக் பாண்டியா எல்லா விதமான தலைமை குணங்களையும் கொண்டவராக இருக்கிறார். அவரை இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக நியமித்தால் நான் அதில் ஆச்சரியப்பட மாட்டேன். வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு வெளியே சென்று விரிவடைந்து தங்கள் திறமைகளை நிரூபிக்க நினைக்கிறார்கள். அப்படி நினைக்கும் வீரர்களுக்கு அணி எல்லாவற்றையும் கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்!