அடிச்சது வெறும் 17 ரன்.. ஆனால் கோலியின் பிரம்மாண்ட ரெக்கார்ட் காலி.. பாபர் அசாம் அசத்தல்!

0
2186
Babar

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மூன்று வடிவத்திலும் கேப்டனாக பாபர் அசாம் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் அணி புதிய எழுச்சி கண்டு வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பாகிஸ்தான் அணி பிடித்திருக்கிறது!

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பு பாபர் அசாம் பேட்டிங்கில் இருந்துதான் வருகிறது. அவர் பேட்டிங்கில் கொடுத்த சீரான ரன்கள், உலக கிரிக்கெட் அரங்கில் அவருக்கென ஒரு தனி இடத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

பாபர் அசாமுக்கு கிடைத்த கௌரவமான இடம் அந்த நாட்டு ரசிகர்களை தாண்டி, உடன் விளையாடும் வீரர்களுக்கும் பெருமையையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இதனால் மெல்ல மெல்ல ஒரு அணியாக ஒருங்கிணைந்த வீரர்கள், தற்சமயத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்கள்.

இது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என எல்லா துறைகளிலும் எதிரொலிக்கிறது. தற்போது உலக கிரிக்கெட்டில் அபாயகரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி பாகிஸ்தான் அணியிடம்தான் இருக்கிறது என்றால் அது மிகை இல்லை.

இந்த நிலையில் நேற்று பாபர் அசாம் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 17 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனாலும் கூட அவருக்கு மிகப்பெரிய உலகச் சாதனை ஒன்று கிடைத்திருக்கிறது.

- Advertisement -

என்னவென்றால், குறைந்த ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் கேப்டனாக 2000 ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இவர் இதை முதல் ஆயிரம் ரன்கள் கேப்டனாக வேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இதற்கு கேப்டனாக விராட் கோலிக்கு 36 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் இதை செய்திருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க் இருவரும் 41 மற்றும் 47 இன்னிங்ஸ்களில் இருக்கிறார்கள்.

தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மொத்தம் 106 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 19 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார்.

இதன் மூலம் பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சிறப்புடன் சயித் அன்வர் 20 சதங்களுடன் முதலிடத்தில் இருப்பதை முறியடிக்க வெகு பக்கத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரன்கள் மற்றும் சதங்களை பொருத்தவரை பாபர் அசாம் புதிய வரலாற்றை எழுதப் போகிறார் என்பதுதான் உண்மை!