“சர்துல் தாக்கூர் மேஜிசியன்!” – வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா உற்சாக பேட்டி!

0
4214
Rohitsharma

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரது சதத்துடன் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது!

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதை எடுத்து இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது!

இந்தத் தொடர் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” நாங்கள் கடந்த ஆறு ஒருநாள் போட்டிகளாக சரியாக செயல்பட்டு வருகிறோம். பேட் மற்றும் பந்து இரண்டிலும் எங்களது செயல்பாடு சரியாக இருக்கிறது. சமி மற்றும் சிராஜ் இல்லாமல் பெஞ்சில் உள்ள சாகல் மற்றும் உம்ரான் மாலிக் இருவருக்கும் வாய்ப்பு அளிக்க விரும்பினோம். நாங்கள் நிறைய ரன்களை அடித்திருந்தாலும் இந்த மைதானத்தில் எந்த ரண்களும் பாதுகாப்பானது இல்லை என்பது தெரியும்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சில காலமாக சர்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப்களை உடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் அவரை சிலர் மேஜிசியன் என அழைக்கிறார்கள். குல்திப் யாதவ் பந்தை எப்பொழுது தந்தாலும் விக்கெட் எடுத்து தருகிறார். அவருக்கு அதிக ஆட்டங்கள் வாய்ப்பு தந்தால் அவரது பந்துவீச்சு இன்னும் சிறப்பாக மாறும்!” என்று தெரிவித்துள்ளார்!

சுப்மன் கில் பற்றி பேசிய அவர்
” அவரது பேட்டிங் அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் தனது வெற்றிகளின் மேல் அமர்ந்து எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாக ஆரம்பிக்கிறார். ஒரு இளம் வீரராக இது முக்கியம். எனக்கு இந்த இருபதாவது சதம் முக்கியமானது. வருகின்ற ஆஸ்திரேலியா தொடர் சவால் ஆனதாக இருக்கும். ஆனால் நாங்கள் அந்த சவாலுக்கு தயாராகவே இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்!