வீடியோ: திக் திக் கடைசி ஓவர்… “இதை மட்டும் சாம்சன் பண்ணல, இந்தியா காலி ஆகிருக்கும்”

0
740

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது கடைசி ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த காரியம் இந்திய அணிக்கு தற்போது வெற்றியை பெற்று தந்திருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தவான் 97 ரன்களும், கில் 64 ரன்களும் ஸ்ரேயாஷ் 54 ரன்களும் அடித்திருந்தனர்.

மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்ததால், இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என்ற நோக்கத்தோடு மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர். துவக்க வீரர் சாய் ஹோப் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தபோதும், அதற்கு அடுத்து வந்த ப்ரூக்ஸ் மற்றும் மேயர்ஸ் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களுக்கு அடுத்ததாக பிரண்டன் கிங் நன்றாக விளையாடிய அரை சதம் அடித்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எளிதில் நெருங்கும் வாய்ப்பை பெற்றது. ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை அவ்வபோது எடுத்து வந்தாலும் ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

போட்டியின் கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பேட்டிங்கில் ஷெப்பர்ட் இருந்தார். முதல் நான்கு பந்துகளில் ஏழு ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டபோது, ஐந்தாவது பந்தை சிராஜ் வீசினார். அப்போது பந்து இடது பக்கமாக சென்று ஒயிடு ஆனது. மிகவும் விலகிச் சென்றதால் பந்து பவுண்டரிக்கு சென்றுவிடும் என பலரும் கருத்தினர். இச்சமயத்தில் சஞ்சய் சாம்சன் லாவகமாக தாவி பவுண்டரி செல்வதை தடுத்தார்.

கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. பவுண்டரி அடித்தால் ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவர் நடத்தப்படலாம். அந்த சூழலில் மீண்டும் ஒரு முறை சஞ்சு சாம்சன் சரியாக தடுத்தால் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி மயிரிழையில் தப்பி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியை வென்றது. இப்போட்டியில் மூன்று ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த கேப்டன் ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சஞ்சு சாம்சன் செய்த மிகச்சிறந்த சம்பவத்தின் வீடியோ பதிவு இதோ..