இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் ஒரு மாற்றமாக அர்ஸ்தீப் சிங்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ரவி பிஸ்னாய்க்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அபிஷேக் ஷர்மா 3வது முறையாக ஏமாற்றம்
இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக மூன்றாவது முறையாகவும் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் கவுதம் கம்பீர் வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்த நிலையில் நான்கு பந்தில் நான்கு ரன்கள் மட்டும் எடுத்து அபிஷேக் ஷர்மா மூன்றாவது முறையாக ஏமாற்றம் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சஞ்சு சாம்சன் உடன் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். நெருக்கடியில் இருந்தாலும் சஞ்சு சாம்சன் தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாடுவதை மாற்றிக் கொள்ளாமல் விளையாடினார்.
சஞ்சு சாம்சன் தனி ஆவர்த்தனம்
ஐபிஎல் தொடரில் பழைய சஞ்சு சாம்சனை பார்த்தது போல இன்று அவருடைய ஆட்டம் இருந்தது. வெறும் 22 பந்துகளை சந்தித்த அவர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அரைசதத்திற்கு சென்றார். பயிற்சியாளர் கம்பீர் எழுந்து நின்று கைத்தட்டினார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் சுழல் பந்துவீச்சாளர் ரியாத் ஹூசைன் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் பறக்க விட்டு மிரட்டினார். இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் வெறும் 40 பந்துகள் மட்டும் சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் தொடரில்.. நாங்க இத ஞாபகம் வைக்கலனா.. எங்க கதை முடிந்தது – பேட் கம்மின்ஸ் கருத்து
மேலும் இதன் மூலம் இந்திய டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேனாக 22 பந்தில் அதிவேகமாக அரைசதம் மற்றும் 40 பந்தில் சதம் அடித்தும் சாதனை படைத்தார். இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் 35 பந்தில் ரோகித் சர்மா சதம் அடித்தது முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 45 பந்தில் சூரியகுமார் யாதவ் சதம் அடித்திருந்தார். இந்த சாதனையை தற்பொழுது சஞ்சு சாம்சன் முறியடித்து இருக்கிறார்.






