தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து இந்திய அணியில் தனது தொடக்க இடத்தை கேரள வீரரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் உறுதி செய்து இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் அவர் தனக்கு ஊக்கம் அளித்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் வாய்ப்பு
கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக அறிமுகமானார். பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் அவரது நிலையற்ற செயல்பாடுகளின் காரணமாக அணிக்குள் வருவதும் போவதுமாய் இருந்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அவரது செயல்பாடு ஓரளவு நல்ல நிலையில் வெளிப்பட்டது.
அதற்குப் பிறகு சில வாய்ப்புகளால் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்க, கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராய் பொறுப்பேற்றதும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சில போட்டிகளில் இதனை சரியாகப் பயன்படுத்தாவிட்டாலும் சமீபத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இரு சதங்கள் அடித்து கம்பீர் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் தொடக்க ஆட்டக்காரராக தனது இடத்தையும் உறுதி செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் டிவில்லியர்ஸ் அவர்களின் யூடியூப் சேனலில் சாம்சன் உரையாடிய போது கம்பீர் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் கூறிய அந்த வார்த்தைகள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும் போது “கம்பீர் பாய் இந்திய அணிக்கு வந்த பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர் என்னிடம் சஞ்சு, உன்னிடம் திறமை இருக்கிறது. அது எனக்கு நன்றாகவே தெரியும். மேலும் உங்களிடம் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் நான் உங்களிடம் திரும்பி வருவேன். அவர் என்னிடம் களத்தில் இறங்குங்கள், ஒவ்வொரு போட்டியிலும் உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள் என்று நம்பிக்கையான வார்த்தைகளை கூறினார்.
இதையும் படிங்க:வெறும் 9 விக்கெட்.. பும்ராவுக்காக காத்திருக்கும் மெகா சாதனைகள்.. ஆஸி 4வது டெஸ்ட்.. முழு விபரம்
அவர் கூறிய அந்த வார்த்தைகள்தான் எனக்கு தெளிவான மனநிலையையும் நம்பிக்கையும் கொடுத்தது. ஆனால் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் விளையாடாத போது தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரது உறுதியை காப்பாற்றாததால் நான் சற்று அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் அவர் தனக்கு கொடுத்த வாய்ப்புக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். கடவுள் அருளால் எனக்கு அந்த விசேஷம் நடந்தது. நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக போட்டிகளை வெல்ல விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






