ஆட்டநாயகன் விருதை அவருக்கு தாங்க.. அஸ்வின்ணா சொல்றது அவர்கிட்டதான் இருக்கு – சஞ்சு சாம்சன் பேட்டி

0
630
Sanju

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பரபரப்பான போட்டியில் மிக சிறப்பாக கடைசி நேரத்தில் செயல்பட்டு, வித்தியாசத்தில் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நான்காவது இடத்திற்கு பேட்டிங் வரிசையில் கொண்டுவரப்பட்ட ரியான் பராக் 28 பந்துகளில் 43 ரன்கள். இதற்கு அடுத்து நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 52 பந்தில் 82 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்.

- Advertisement -

இந்த இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல் தாக்குப்பிடித்து விளையாடி 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இறுதிவரை களத்தில் நின்ற வெஸ்ட் இண்டிஸ் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் 41 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். கடைசி ஐந்து ஓவர்களுக்கு வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, கேஎல் ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள். ஆனாலும் அவர்களால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை.

லக்னோ அணியின் பேட்ஸ்மேன்களால் கடைசி கட்ட ஐந்து ஓவர்களில் அதிரடியாக விளையாட முடியாததற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சந்தீப் சர்மா மிக முக்கிய காரணமாக இருந்தார். பதினைந்தாவது ஓவரில்தான் அவர் பந்து வீச வந்தார். அங்கிருந்து 3 ஓவர்கள் பந்து வீசிய அவர் கேஎல்.ராகுல் விக்கெட்டை கைப்பற்றி, மேலும் மூன்று ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற்றதில் இவரது பங்கு மிக முக்கியமானது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “களத்தில் நின்று விளையாடுவது நன்றாக இருக்கிறது. மேலும் நீங்கள் போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியானது. எனக்கு இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான காம்பினேஷனில் சங்கக்கரா ஒரு ரோலை கொடுத்திருக்கிறார். நான் பின்பற்ற வேண்டிய விஷயங்களையும் அவர் எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். நான் 10 ஐபிஎல் தொடர் விளையாடி வருகிறேன். நான் களத்தில் கொஞ்சம் அதிக நேரம் நின்று விளையாடி நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : மாஸ்டர் பிளான் போட்டு லக்னோவை மடக்கிய சாம்சன்.. ராஜஸ்தான் வென்றது எப்படி? – ஐபிஎல் 2024

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது இந்த அனுபவம் எனக்கு கிடைத்தது. நாம் களத்தில் சற்று நின்று விளையாடும் பொழுது நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்ளலாம். நான் எப்பொழுதும் முதல் பந்தாக இருந்தாலும் கடைசி பந்தாக இருந்தாலும், பந்துக்கு தகுந்தபடி விளையாட கூடியவனாக இருந்தேன். இந்த ஆட்டநாயகன் விருதை சந்திப் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும். அவர் கடைசி மூன்று ஓவர்களை அப்படி வீசவில்லை என்றால், இப்பொழுது நான் இந்த விருதை வாங்கி இருக்க முடியாது. திறமையை தாண்டி அழுத்தமான நேரத்தில் என்ன கேரக்டரை வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம் என்று அஸ்வின் அண்ணா கூறுவார். அதை சந்திப் சர்மாவிடம் பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.