இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்பி சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சஞ்சு சாம்சனின் அதிரடி
இந்திய அணியில் அவ்வப்போது வருவதும் போவதுமாய் இருந்த சஞ்சு சாம்சன் டி20 உலக கோப்பையில் இருந்து இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பெற்று வருகிறார். அதிலும் சூரியகுமாரியாதவ் டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு இந்திய அணியில் துவக்க வீரராக தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதம் அடித்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதமும், நான்காவது டி20 போட்டியில் சதமும் விளாசி ஒரு துவக்க வீரராக தனது அதிரடியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் அவர் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கருத்துக்கள் வெளிவரும் நிலையில் இதனை இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்பி சிங் மறுத்து பேசி இருக்கிறார்.
இன்னும் நேரம் இருக்கிறது – ஆர்பிசிங்
இது குறித்து அவர் கூறும் போது “சஞ்சு சாம்சனின் தற்போதைய ஆட்டத்தை பார்த்தால் அடுத்த டி20 உலக கோப்பையில் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கூறலாம். ஆனால் உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்கள் சிறந்த செயல் திறன் கொண்ட வீரர்களாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:ஷமி இதை செய்யவே வேண்டாம்.. அவர் ஆஸ்திரேலியா கிளம்ப இந்த ஒரு விஷயமே போதும் – ஆதரவு தரும் கங்குலி
அவர்கள் இடது மற்றும் வலது காம்பினேஷனை உருவாக்க முடியும். மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேறி இருந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே நேரம் வரும்போது என்னவெல்லாம் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். தற்போது சாம்சனுக்கு 30 வயதாவதால் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






