உங்க பாலிட்டிக்ஸ்ல இவரோட கிரிக்கெட் வாழ்க்கைய வீணடிக்காதிங்க! – ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்!

0
149

டி20 உலக கோப்பை இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாததை குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பலர் தங்களது ஆதங்கத்தையும் கடும் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெறும் இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கிட்டத்தட்ட எதிர்பார்த்த அனைத்து வீரர்களும் இந்த அணியில் இடம் பெற்று விட்டனர். காயம் காரணமாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்ஸர் பட்டேல் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். காயம் காரணமாக, பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. இருவரும் தங்களது உடல் தகுதியை பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் விளையாட வைக்கப்பட்ட ஆவேஷ் கான், ரவி பிஸ்னாய் மற்றும் அர்ஷதிப் சிங் ஆகியோரில், அர்ஷதிப் சிங் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். ரவி பிஸ்னாய் ரிசர்வ் வீரராக உள்ளார். ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தீபக் ஹூடா டி20 உலக கோப்பையில் தனது இடத்தை தக்க வைத்திருக்கிறார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் முன்னணி கீப்பர்களாக இருக்கின்றனர். ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் இடம் பெற்று நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றிருக்கிறார். ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் அபாரமாக கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் பங்களித்து வந்த இவருக்கு டி20 உலககோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பேச்சுக்கள் நிலவின. ரிசர்வ் வீரர்கள் வரிசையில் கூட இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

இதனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, “பிசிசிஐ உள்ளே நிலவி வரும் பாலிடிக்ஸ் காரணமாக ஒரு சிறந்த வீரரின் வாழ்க்கையே வீணடிக்கப்பட்டு வருகிறது.” என்று மிகப்பெரிய விமர்சனத்தை சிலர் முன் வைத்திருக்கின்றனர். மற்றும் பலர், “இது சஞ்சு சாம்சனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறைந்தபட்சம் அவர் ரிசர்வ் வீரராக அணியில் இருந்திருக்க வேண்டும். ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் விட சிறப்பான கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்திருக்கிறார்.” எனவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க நல்ல பார்மில் இருந்து வரும் முகமது சமி தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து ஒதுக்கப்பட்ட வண்ணம் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இவர் அபாரமாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்துவீச்சிருக்கு சாதகமாக இருக்கும். ஆகையால் இவருக்கு அணியில் இடம் கொடுக்கப்படும் என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல விமர்சனத்திற்கு பிறகு ரிசர்வ் வீரர்கள் வரிசையில் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மற்றொருபுறம் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு வீரர்கள் – முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.