இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில்லிடம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடம் பார்த்த ஒரு திறமையை பார்த்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டி பேசி இருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சதம் அடித்தார். மேலும் முதல் 50 ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார். இந்தத் தொடரில் அவர் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் விராட் கோலியிடம் பார்த்தது
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் மிகவும் தடுமாற்றமாக காணப்பட்டார். அவரிடமிருந்து பெரிய ஸ்கோர் எதுவும் வரவில்லை. அவருக்கு சில நல்ல துவக்கங்கள் கிடைத்தது ஆனால் அதை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக மாறி வந்திருக்கிறார்.
இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” நேற்றைய போட்டியில் மிகவும் தனித்து தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், சுப்மன் கில் தன்னுடைய சதத்தை எவ்வளவு எளிதாக காட்டினார் என்பதுதான். கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் பேட்டிங் செய்யும்பொழுது, நீங்கள் நிமிர்ந்து பார்த்தால் 60 அல்லது 70 ரன்கள் இருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் சதத்தை அடித்து இருப்பார்கள். அதேபோலவே கில் நேற்று சதம் அடித்தார். இதுவே 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு விதிவிலக்கான வீரருக்கான அடையாளம்”
கில்லின் லட்சியம் இதுவாக இருக்கும்
“சாம்பியன்ஸ் டிராபி தொடரை எடுத்துக் கொள்ளும் பொழுது மற்ற வீரர்களை விட கில் அதிகம் கவனிக்க வேண்டிய வீரராக இருப்பார். அவருடைய தாக்குதல், தற்காப்பு மற்றும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தல் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கிறது. நாம் அவரை டி20 கிரிக்கெட்டிலும், ஆஸ்திரேலியாவிலும் பார்த்ததைவிட மாறுபட்டவராக சிறப்பாக இருக்கிறார்”
இதையும் படிங்க : ஆர்சிபி அணிக்கு.. யாரும் எதிர்பார்க்காத புதிய கேப்டன்.. விராட் கோலி வாழ்த்து.. வெளியான தகவல்கள்
“அவர் தற்போது வெறும் 25 வயதான இளம் வீரராக இருக்கிறார். மேற்கொண்டு அவர் தொடர்ந்து விளையாடும்போது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேவையான எல்லா விஷயங்களும் அவருக்கு சேர்ந்து வரும் என்று நான் நினைக்கிறேன். மேலும் கிரிக்கெட்டில் அவருடைய லட்சியங்கள் பெரிதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். அவர் அடுத்து டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்” என தெரிவித்திருக்கிறார்.






