இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்று இருக்கிறார். ஆனால் ஒரு நட்சத்திர வீரர் அணிக்கு திரும்பி வருவது அல்லது ஒரு திறமையான இளம் வீரர் அணிக்கு வருவதற்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அவ்வளவு எதிர்பார்ப்பு இவருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் இப்படியான எதிர்பார்ப்பு பயிற்சியாளர் மேல் இருக்கக் கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடியாக பேசியிருக்கிறார்.
கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து இரண்டு முறை கோப்பையை வென்று இருக்கிறார். அவருக்கு வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்து விளையாட வைப்பதில் சிறந்த அணுகுமுறை இருக்கிறது.
மேலும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு இரண்டு வருடங்கள் கம்பீர் மென்டராக இருந்த பொழுது, அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆண்டு அவர் அந்த அணியில் இருந்து விலகி வந்ததும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும் லக்னோ அணியை ஏலத்தில் இருந்து நல்ல முறையில் உருவாக்கியவர் கம்பீர் என்றும் சொல்லலாம்.
இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக வந்து சுனில் நரைனை துவக்க ஆட்டக்காரராக விளையாட விட்டு, ஒட்டுமொத்தமாக மொத்த அணியையும் தாக்குதல் பாணியில் விளையாட வைத்து, எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் கம்பீர் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முதல் இரண்டு முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் பொழுது பயிற்சியாளரே கிடையாது என்றும், அதற்கு அடுத்து வெளிநாட்டவர் கேரி கிரிஸ்டன், அடுத்து ஒரு முறை இந்தியரான ராகுல் டிராவிட் ஆகியோர் இருந்திருக்கிறார்கள் எனவும், எனவே இதற்கும் பயிற்சியாளர்களுக்கும் நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : எங்க டீம்க்கு இன்ஜின் இல்லாம இருக்கு .. ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ரோல்தான் கொடுத்திருக்கோம் – சூரியகுமார் பேட்டி
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “முதல் உலகக் கோப்பை வெற்றியில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளார் கிடையாது. மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு இயக்குனராக லால்சந்த் ராஜ்புத் சென்றார். அதற்கடுத்த இரண்டு உலகக் கோப்பை வெற்றியில் கேரி கிரிஸ்டின் மற்றும் ராகுல் டிராவிட் இருந்தார்கள். உண்மையில் இது இந்திய கிரிக்கெட் பற்றியது. பயிற்சியாளர் யார் என்பதைப் பற்றியது கிடையாது. பயிற்சியாளர்களுக்கும் இந்த வெற்றிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நாம் நினைப்பதை நிறுத்தும் நேரம் இது” எனக் கூறியிருக்கிறார்.