இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா மோசமான நிலையில் ஆட்டம் இழந்தார்.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் தனக்கு குழந்தை பிறந்த காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா ஆஸ்திரேலியா பிரைம் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்தார். அதற்கு முன்னர் நடைபெற்ற ஆட்டத்தில் பும்ரா தலைமையிலான இந்திய அணி விளையாடி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா பெரிதாக ரன் அடிக்காமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில் தற்போது நடைபெற்று வரும் பகல் இரவு ஆட்டமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆறாவது வரிசையில் களமிறங்கி 23 பந்துகளை எதிர்கொண்டு மூன்று ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் தற்போது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அடித்து ஆடாமல் தடுத்து விளையாட தடுப்பு நுட்பங்களை மாற்றி அமைப்பதற்கான ஒரு தெளிவான சான்று என்னவென்றால், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும் போது யாரும் பின் காலில் விளையாட முயன்று அதில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்து வெளியேற மாட்டார்கள். இந்த முறையில் ஆட்டம் இழப்பது தவறானது” என்று தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:ஆள விடுங்க.. கோச் பதவியே வேணாம்.. ராஜினாமா செய்த டுமினி.. விளக்கம் கொடுத்த கிரிக்கெட் போர்டு.. முழு விபரம்
சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ரோகித் சர்மா பெரிதாக ரன்கள் அடிக்காத நிலையில் தற்போது அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தொடர்வது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இருப்பினும் இது நீண்ட நெடிய டெஸ்ட் தொடர் என்பதால் இன்னும் மூன்று போட்டிகள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் மீதம் இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா திரும்பவும் தனது பேட்டிங் ஃபார்முக்கு திரும்புவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரோகித் சர்மா மீண்டும் தனது பேட்டிங் நுட்பத்தை சரி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.