ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக அவரை இந்திய டி20 அணியின் கேப்டனாக கொண்டு வர முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சந்தீப் சர்மா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கொல்கத்தா பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார். மேலும் கேப்டனாக கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இருந்த போதிலும் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.
அர்த்தமற்ற விவாதம்
இது குறித்து பேசி இருக்கும் சந்தீப் சர்மா கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக தனது அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார் என்கின்ற விவாதம் அர்த்தமில்லாதது. இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் எந்த ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக இல்லை. எனவே இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பதற்கு ஐபிஎல் அளவுகோல் கிடையாது”
“கடந்த மூன்று ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் ரோஹித் சர்மா கேப்டனாக இல்லை. ஆனால் அவர் இந்திய அணிகளுக்கு கேப்டனாக இருந்து வந்தார், தற்போதும் இருக்கிறார். எனவே நீங்கள் ஐபிஎல் தொடரில் என்ன செய்கிறீர்கள் என்பது இந்த விஷயத்திற்கு பொருந்தாது”
இது முற்றிலும் வித்தியாசமானது
“ஐபிஎல் தொடர் என்பது முழுக்க வித்தியாசமானது. அது உள்நாட்டு டி20 லீக் அவ்வளவுதான். நீங்கள் ஒரு சர்வதேச அணியை தேர்ந்தெடுக்கும் பொழுது 15 வீரர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். எனவே அந்த 15 வீரர்களையும் சிறப்பாக நிர்வகிக்கும் ஒரு கேப்டனையும் தேர்ந்தெடுக்கிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் உங்களுக்கு இந்திய இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வருகிறார்கள்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் இந்திய ஓபனர்கள் யார்?.. பரிதாபமாக சிக்கிய வீரர்.. வெளியான புதிய தகவல்
“எனவே ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் என்ன செய்தார் என்பது நமக்கு அர்த்தம் அற்ற விவாதம். ஐபிஎல் மற்றும் சர்வதேச அணி இரண்டும் வெவ்வேறானது. மக்கள் இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னால் இந்த விஷயங்கள் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






