“நியாயமா பாத்தா இந்த விருது பென் ஸ்டோக்ஸ்-க்கு போகணும்..” – ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை அள்ளிய சுட்டிக் குழந்தை சாம் கரன் பெருமிதமாக பேட்டி!

0
9158

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் இளம் இடது கை வேகம் பந்துவீச்சாளர் சாம் கரன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு முறை உலக கோப்பையை வென்றிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் வீக்கெட்டுகளை இழந்து வந்தது.

பாகிஸ்தான் அணி துவக்க வீரர்களான ரிஷ்வான்(15) மற்றும் பாபர் அசாம்(32) இருவரும் நீடித்து நிற்கவில்லை. மிடில் ஓவரில் ஷான் மசூத்(38) சற்று நம்பிக்கை அளித்தார். நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப்கான் 20 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

அரை இறுதிப் போட்டியில் அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் இம்முறை முதல் ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சிறிது நேரம் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்து ஹரிஸ் புரூக் 20 ரன்கள், மொயின் அலி 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இறுதி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார்.

போட்டியின் 19வது ஓவரில் இலக்கை கடந்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் அடித்திருந்தார்.

நான்கு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய சாம் கரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் இந்த உலக கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியதால் தொடர் நாயகன் விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

“இந்த ஆட்டநாயகன் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் முழுமையாக தகுதியானவர். மைதானம் இரண்டு பக்கங்களில் பெரிதாகவும் முன்னும் பின்னும் சிறிய அளவிலும் இருந்ததால் ஸ்டம்பை நோக்கி அதிக பந்துகளை வீச வேண்டும் என்று நினைத்தேன். அது எனக்கு எடுபட்டது.

பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறந்த வீரர். அவர் மீது பல விமர்சனங்களை மக்கள் வைக்கின்றனர். நான் எப்படிப்பட்ட வீரன் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

அணியின் வெற்றிக்கு பவுலிங்கில் நானும் பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பேட்டிங்கை வளர்த்து வருகிறேன். உலக சாம்பியனாக இருப்பது மிகுந்த பெருமையாக இருக்கிறது.” என்று சிரித்தபடி பேசினார்.