சாய் சுதர்சன் தனியாக போராடி சதம்.. அர்ஜுன் டெண்டுல்கர் ஏமாற்றம்.. தமிழ்நாடு அபார வெற்றி.. விஜய் ஹசாரே டிராபி!

0
14859
Sai

தற்பொழுது இந்தியாவில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று முதல் துவங்கி நடைபெறுகிறது.

மொத்தம் இந்தியாவில் இருந்து 38 அணிகள் பங்கு பெறும் இந்த போட்டியில் ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும். இதற்கு அடுத்து நாக்அவுட் போட்டிகள் மூலம் சாம்பியன் அணி வெளிவரும்.

- Advertisement -

இந்தத் தொடரில் இதுவரை அதிகபட்சமாக தமிழ்நாடு அணி ஐந்து முறை தொடரை கைப்பற்றிய அணியாக இருந்து வருகிறது.

இன்றைய முதல் நாளில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற்றது. அதில் ஒரு போட்டியில் தமிழ்நாடு அணியும் கோவா அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கோவா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தமிழ்நாடு அணிக்கு ஒரு முனையில் துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் நிலைத்து நின்று விளையாட, அவருக்கு பக்கபலமாக விளையாடுவதற்கு யாரும் இல்லாமல் போனது.

- Advertisement -

தமிழ்நாடு பேட்டிங்கில் நாராயணன் ஜெகதீசன் 2, சாய் கிஷோர் 3, விஜய் சங்கர் 24, பாபா இந்திரஜித் 24, ஷாருக்கான் 9 என எல்லோரும் வரிசையாக வெளியேறினார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்பாக மற்றும் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக பாபா அபராஜித் 40 ரன்கள் எடுத்தார்.

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய இளம் வீரர் சாய் சுதர்சன் 144 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 125 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு தமிழ்நாடு 296 ரன்கள் எடுத்தது.

கோவா அணியின் சார்பாக பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் பத்து ஓவர்கள் பந்து வீசி ஆரம்பத்தில் இரண்டு மெய்டன் செய்து சிறப்பாகவே இருந்தார். மேலும் அவர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் கடைசி கட்டத்தில் அவர் ரன்கள் கொடுத்தார். ஒட்டு மொத்தமாக 10 ஓவர்களில் அவர் 70 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பேட்டிங்கிலும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கோவா அணி 50 ஓவர்கள் முடிவில் 263 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் சினேகல் கௌதன்கர் 55, கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 61 ரன்கள் எடுத்தார்கள்.

தமிழ்நாடு அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய சந்திப் வாரியர் நான்கு விக்கெட்டுகள், சாய் கிஷோர் மற்றும் பாபா அப்ரஜித் தலா 2 விக்கெட்டுகள், நடராஜன் மற்றும் சாய் சுதர்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். சாய் சுதர்சனின் பேட்டிங் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. அவருக்கான இந்திய அணி வாய்ப்புக் கூடிய விரைவில் அமைந்தால் ஆச்சரியம் இல்லை!