ஐபிஎல் தொடரில் தனக்கு அனுபவம் எவ்வாறு சிறந்த முறையில் கிடைத்தது என்பது குறித்து இந்திய மற்றும் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் வெளிப்படையாக பேட்டி அளித்திருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் 62 ஆவரேஜில் மூன்று போட்டிகளில் 182 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சாய் சுதர்சன் இருந்து வருகிறார். நேற்று மூன்று போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடிக்கும் வாய்ப்பை 49 ரன்கள் எடுத்து தவறவிட்டார். ஆனால் பட்லர் உடன் இணைந்து அதிரடியாக பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி குஜராத் ஆர்சிபி அணியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
குஜராத்தின் பலமான வேகப்பந்து வீச்சாளர்கள்
குஜராத் அணியின் வழிகாட்டியாக இந்திய முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஆசிஸ் நெக்ரா இருக்கிறார். இவர் முதல் சீசனில் இருந்து குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை மிக பலமாக அமைப்பதில் குறிக்கோளாக இருந்தார். இதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்து குஜராத் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய குழுவை வைத்திருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, ரபாடா மற்றும் ஜெரால்ட் கோட்சி என சிறந்த வேகப்பந்து வீச்சு குழுவை உருவாக்கி இருந்தார். இந்த முறை காயத்தில் இருந்த முகமது சமியை தக்க வைக்காமல், அவருடைய இடத்திற்கு முகமது சிராஜை கொண்டு வந்தார். முகமது சிராஜ் கடந்த இரண்டு போட்டிகளாக குஜராத் அணிக்கு மிகச் சிறந்த பந்துவீச்சை கொடுத்து வருகிறார். எனவே குஜராத் அணியின் வலைப்பயிற்சியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாட வேண்டியது அவசியமாகிறது.
என்னுடைய அனுபவத்திற்கு காரணம்
இதுகுறித்து சாய் சுதர்சன் பேசும் பொழுது “இது எனக்கு நான்காவது ஆண்டு ஐ பி எல் தொடராகும். இதன் காரணமாக எனக்கு நிறைய அனுபவம் கிடைத்திருப்பதாக நான் உணர்கிறேன். நான் சில கடினமான சூழ்நிலைக்கு இங்கு ஆளாக இருக்கிறேன். குறிப்பாக நான் வலை பயிற்சியில் எங்களுடைய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எனவே எனக்கு வலைப்பயிற்சியிலும் நல்ல உதவி கிடைத்தது. நான் கடினமான சூழ்நிலைகளுக்கு உள்ளாகி சிறந்த விஷயங்களை தெரிந்து கொண்டேன்”
இதையும் படிங்க : விராட் தோனி ரோகித்.. இந்த மூணு பேரு கிட்ட இந்த மூணு விஷயம் எனக்கு வேணும் – நிதிஷ் குமார் விருப்பம்
“இந்த மூன்று ஆண்டுகளில் நிறைய கற்றுக் கொண்டேன். இது இந்த விளையாட்டை நன்றாக புரிந்து கொள்ளவும், இந்த விளையாட்டின் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ளவும் எனக்கு உதவி இருக்கிறது. தற்பொழுது பட்லர் நிறைய அனுபவத்தையும் நிறைய அறிவையும் கொண்டு வருவதாக நான் உணர்கிறேன். இது மிடில் ஓவர்களை சிறப்பாக விளையாடவும், கடைசி ஐந்து ஓவர்களை அதிரடியாக விளையாடவும் உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.






