கில் முதல்முறையா கேப்டன்சி பண்றாருனு நம்ப முடியல.. எனக்கே செம ஐடியாஸ் குடுத்தாரு – தமிழக வீரர் சாய் கிஷோர் பேட்டி

0
568
Gill

நடப்பு ஐபிஎல் 17வது சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பிலிருந்து, கடைசி கட்டத்தில் 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அதிர்ச்சி அளித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி எப்பொழுதுமே ஒரு அணியாக சேர்ந்து விளையாடி வெல்லக்கூடிய அணியாக இருந்து வருகிறது. நேற்றைய போட்டியிலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து சிறந்த பங்களிப்பை கொடுத்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தார்கள். அந்த அணிக்கு நேற்று முதல் முறையாக அறிமுகமான ஸ்பென்சர் ஜான்சன் முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்தாலும் கூட, 19ஆவது ஓவரை திரும்ப வந்து வீசிய பொழுது 8 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார். குஜராத் அணி இறுதி ஓவரில் வெற்றி பெறுவதற்கு அவர் வீசிய 19 வது ஓவர் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இதே போல நேற்று பேட்டிங்கில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார். ஆடுகளம் விளையாடுவதற்கு மெதுவாக இருப்பதால், நினைத்தபடி விளையாட முடியாது என்பதை உள்ளே சென்றதுமே உணர்ந்ததாக அவர் கூறியிருந்தார். நேற்று அவருடைய பேட்டிங் பங்களிப்பின் காரணமாகவே குஜராத் அணி 168 ரன்கள் எடுக்க முடிந்தது. இதேபோல் கடைசி கட்டத்தில் வந்த ராகுல் திவாட்டியா 15 பந்தில் 22 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

இதேபோல் பந்துவீச்சில் மோகித் சர்மாவுக்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா விக்கெட்டை கைப்பற்றினார். அங்கிருந்துதான் டிவால்ட் பிரிவியஸ் உடன் அமைந்திருந்த பெரிய பார்ட்னர்ஷிப் உடைந்து தொடர்ச்சியாக குஜராத் அணிக்கு விக்கெட்டுகள் கிடைக்க ஆரம்பித்தது. நேற்று அவருடைய சிக்கனமான பந்துவீச்சுக்கு அவர் அமைத்த லைன் மற்றும் லென்த் மிகவும் சிறப்பாக இருந்தது. புதிய கேப்டனின் கில்லின் கீழ் தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் பெற்றதைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து சாய் கிஷோர் கூறும் பொழுது “கில் அணியை சிறப்பாக வழி நடத்தினார். அவர் முதல் முறை கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவது போல தெரியவில்லை. சுழற் பந்துவீச்சாளரான எனக்கு அவர் கொடுத்த ஐடியாக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா ஒரு பெரிய மேட்ச் வின்னர். அவரைப் போன்ற ஒரு வீரரின் விக்கெட்டை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் நன்றி உள்ளவனாகவும் இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் 7 பந்து 23 ரன்கள்.. நெஹரா சொன்ன அந்த விஷயம் என்ன ஜெயிக்க வச்சது – ஸ்பென்சர் ஜான்சன் பேட்டி

நீங்கள் தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் வீசும் பொழுது, அது ஒருநாள் கிரிக்கெட்டில் பந்து வீசுவது போல. நீங்கள் நல்ல ரிதத்திற்கு வர முடியும். நாங்கள் இம்பேக்ட் பிளேயர் விதியின் படி ஆறு பந்துவீச்சாளர்களை பெற்றிருக்கிறோம். இதன் காரணமாக நான் ஒரே முறையில் நான்கு ஓவர்கள் வீச வேண்டி வருகிறது. அதே சமயத்தில் நான் பவர் பிளேவில் பந்து வீச வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். சையத் முஸ்டாக் அலி தொடரில் நான் ஆரம்பத்தில் ஒரு ஓவர் பந்து வீசி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.