சாய் கிஷோர் வருண் அசத்தல் பந்துவீச்சு.. ரஜத் பட்டிதார் போராட்டம் வீண்.. மபி-யை வென்றது தமிழ்நாடு!

0
2009
Varun

இந்தியாவில் மிகப்பெரிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில் இந்தத் தொடரில் இன்று தமிழ்நாடு, மத்தியப்பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தானே, தாதாஜி கொந்தேவ் ஸ்டேடியத்தில் குரூப் இ பிரிவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தமிழ்நாடு அணிக்கு தொடக்கம் ஓரளவு சிறப்பாக அமைய, ஒன்டவுனில் களமிறங்கிய இந்திரஜித் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் குவித்தார். அவருக்கு பிரதோஷ் பால் ரஞ்சன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க, இருவரின் உதவியுடன் தமிழ்நாடு அணி 195 ரன்கள் குவித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

மத்திய பிரதேச அணித் தரப்பில் ராகுல் பாதம், சரன்ஸ் ஜெயின், சுபம் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது.

- Advertisement -

தமிழ்நாடு அணியின் சிறப்பான பந்துவீச்சினால் மத்திய பிரதேச அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மத்திய பிரதேச அணித் தரப்பில் ரஜத் பட்டிதார் 73 ரன்கள் குவித்து கடைசி வரை போராடினார். ஆனால் இவருக்கு மத்திய பிரதேஷ் தரப்பில் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை.

தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள தமிழக அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. மத்தியப் பிரதேச அணியானது ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகள் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.