சச்சினின் ரேர் சாதனை.. உடைக்கும் வாய்ப்பை தவறவிடும் ரோகித் கில்.. பிசிசிஐ ஏன் தடுக்கிறது?

0
577
Gill

உலக கிரிக்கெட்டில் சச்சின் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகள் நிறைய இருக்கிறது. அதில் சில சாதனைகள் மலைப்பானவை. எந்த காலத்திலும் யாராலும் உடைக்க முடியாது என்கின்ற எண்ணத்தை தரக்கூடியவை.

இந்த வகையில் சச்சின் 1998 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 1800 ரன்கள் மேல் அடித்து, ஒரு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்கின்ற சாதனையை படைத்திருந்தார்.

- Advertisement -

இந்த அரிய சாதனையை உடைக்கும் வாய்ப்பு இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு இந்த ஆண்டு கிடைத்தது. முதலில் இந்தச் சாதனையை ஒருவர் உடைக்கும் வாய்ப்பில் இருப்பதே பெரிய சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உலகக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளை தவற விட்டார். மேலும் அதனால் உடல் தகுதியிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் உலகக் கோப்பையில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனாலும் தற்போது கில் 1500 ரன்கள் தாண்டி இந்த ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். இந்த வருடத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மட்டுமே இந்தியாவுக்கு இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவருமே இடம்பெறவில்லை. இந்தியத் தேர்வுக்குழு இவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுத்திருக்கிறது.

இதன் காரணமாக கில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன் அடித்தவருக்கான சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். மேலும் இதன் மூலம் இன்னொரு சச்சின் சாதனையையும் ரோஹித் மற்றும் கில் இருவரும் உடைக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 1998 ஆம் ஆண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலம் மட்டும் 992 ரன்கள் குவித்து ஒரு அரிய சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இந்த வகையில் இந்த ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் பவுண்டரி சிக்ஸர்கள் மூலம் 966 ரன்களும், ரோகித் சர்மா 926 ரன்களும் குவித்து, அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். தற்பொழுது தென் ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் விளையாடாத காரணத்தால் சச்சினின் இந்த இரண்டு சாதனைகளும் தப்பித்து இருக்கிறது.

ரோகித் சர்மா மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இல்லை என்று பிசிசிஐ இடம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இளம் வீரர் சுப்மன் கில் டி20 உலகக் கோப்பைக்காக டி20 கிரிக்கெட்டிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த, தற்போது அவருக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது!