மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இன்சமாம் உல் ஹக்கிற்கு சச்சின் கூறிய நெகிழ்ச்சியான மெசேஜ் – டிவிட்டரில் வைரல்

0
1940
Sachin Tendulkar and Inzamam Ul Haq

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் பேட்டிங் வீரர் இன்சமாம் உல் ஹக். பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்தவர் இவர். 1992ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இவரது அதிரடி அரைசதம் தால்தான் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்று உலக கோப்பையை கைப்பற்றியது. இன்று வரை பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் இவர்தான். கடந்த 2007ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் உடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர் இன்சமாம்.

கிரிக்கெட் ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் அணி தேர்வாளராகவும் சிறிது காலம் செயல்பட்டார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக சிலகாலம் செயல்பட்டார் இன்சமாம். இந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் அணிக்கு பயிற்சியாளராக இவர் செயல்பட்டார். யூடியூபில் தன்னுடைய பார்வைகளை இவர் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரரான இன்சமாம் இன்று மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மூன்று நாளாக இதயத்தில் சிறிது வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை நடந்தது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இன்சமாம் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இன்சமாம் சீக்கிரம் குணமடைய விரும்புவதாக கூறி இருந்தார். மேலும் களத்தில் அமைதியாக இருந்தாலும் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மேற்கொள்ள முடியாத வீரராக திகழ்ந்தவர் இன்சமாம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சச்சின். பல சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்து உள்ள இன்சமாம் இந்த நிலையில் இருந்தும் சீக்கிரம் மீண்டு விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சச்சின்.

சச்சின் வெளியிட்டுள்ள இந்த ட்வீட் பல மக்களை கவர்ந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ட்விட்டை விரும்பியுள்ளனர். ஆயிரம் முறைக்கும் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. சச்சினுடன் இணைந்து பல கிரிக்கெட் ரசிகர்கள் இன்சமாம் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றனர்.