இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி மூன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அணியின் நலனுக்காக செய்யணும்
ரிஷப் பண்ட் குறித்து பேசி உள்ள சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் எப்பொழுதும் அதிகப்படியாக தான் எப்படி விளையாட வேண்டும் என்கின்ற தன்னுடைய உள்ளுணர்வை அதிகம் ஆதரிக்க வேண்டும். ஆனால் அணியின் நலனுக்காக அவர் தன்னுடைய ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைகளும் வரும். அந்த இடத்தில்தான் அவர் மாற வேண்டும்”
“மீதமுள்ள நேரத்தில் அவர் என்ன செய்தாலும் அது அணியின் நலனுக்காகவே என்று எனக்குத் தெரியும். ஆனால் அணுகுமுறை வித்தியாசமாக இருக்க வேண்டும். மனதில் நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும். நீங்கள் ஆட்டத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தால் உங்கள் பேட்டிங்கை தற்காப்பாக மாற்ற வேண்டி வரும்”
நான் கேப்டனாக இருந்தால்…
“45 நிமிடம், ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கூட நீங்கள் பொறுமையாக உங்களது ஆட்டத்தை மாற்றிக் கொண்டு தற்காப்பாக விளையாட வேண்டிய சூழ்நிலைகள் வரும். அப்பொழுது ரிஷப் பண்ட் தன்னுடைய பேட்டிங்கில் ஆபத்தான ஷாட்டை எடுத்து விட வேண்டும். அவர் பெரிய அளவில் ஆக்ரோஷமாக இருக்கக் கூடாது. அவர் பாசிட்டிவாக இருக்கலாம் ஆனால் ஷாட் செலெக்ஷன் மிகவும் முக்கியம்”
இதையும் படிங்க : விராட் ரோஹித் பாய் கொடுத்த அட்வைஸ் இதுதான்.. ஆனா நான் வேற விஷயத்தை எடுக்க போறேன் – கில் பேட்டி
“நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் ரிஷப் பண்டிடம் பத்துக்கு ஒன்பது முறை உன்னுடைய இயல்பான விளையாட்டை உள்ளே சென்று விளையாடு என்றுதான் கூறுவேன். ஆட்டத்தை காப்பாற்ற வேண்டி இருந்தால் மட்டுமே பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டி வருகிறது. இல்லையென்றால் நீ என்ன நினைக்கிறாயோ அதையே உள்ளே போய் செய் என்று தான் அனுப்பி வைப்பேன்” என்று கூறி இருக்கிறார்.






