இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கில் தன்னுடைய பொறுப்பில் மிகச் சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அதற்கு பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் இருப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.
நடப்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு நான்கு இன்னிங்ஸ்களில் 500 ரன்கள் தாண்டி குவித்து அசத்தியிருக்கிறார்.
திருப்புமுனையை உண்டாக்கிய முடிவு
இன்று இந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி எதிர்ப்பாராத விதமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில் ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் சிராஜ் மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இதுவரையில் விக்கெட் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் முதல் செஷன் போதே நிதீஷ் குமார் ரெட்டிக்கு கேப்டன் கில் ஐந்து ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கொடுத்தார். நிதீஷ் குமார் ரெட்டி முதல் ஓவரிலேயே பென் டக்கெட் மற்றும் ஜாக் கிரவுலி என துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் வெளியேற்றி அசத்தினார். முன்னணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாத பொழுது கில் எடுத்த முடிவு திருப்புமுனையாக அமைந்தது.
சச்சின் பாராட்டு
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசும்பொழுது “தற்போது கில் கேப்டனாக எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவருடைய முடிவுகள் அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் நல்ல முடிவுகளை கொண்டு வரக்கூடியதாக அமைந்திருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அவர் சிறப்பான நிலையில் இருக்கிறார்”
இதையும் படிங்க : ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய நிதிஷ் குமார்.. 3வது டெஸ்டிலும் இந்தியா அபாரம்.. மிரட்டல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ஜோ ரூட்
“குறிப்பாக ஒரு கேப்டன் பேட்ஸ்மேனாக ரன்கள் குவிக்கும் பொழுது நல்ல மனநிலையில் இருப்பார். இது அவர் முடிவு எடுப்பதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது கில்லுக்கு இது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அவரது பலவீனத்தை கண்டறிவதற்காக பந்துவீச்சாளர்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






