இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கிரிக்கெட் பிளேயர் யார் என்ற விவாதத்தில், முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தைரியமாக சில தேர்வுகளைச் செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
ஈஎஸ்பிஎன் நடத்திய ‘ஆல் டைம் பிராக்கெட்’ என்ற சுவாரசியமான போட்டியில், இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரார்களை ஒப்பிட்டு அஸ்வின் தேர்வு செய்தார். இதில் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்று வந்தபோது, அஸ்வின் சற்று யோசித்து பும்ராவைத் தேர்வு செய்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் எம்.எஸ். தோனி மற்றும் வீரேந்தர் சேவாக் இடையிலான ஒப்பீட்டில் சேவாக்கையும், சுனில் கவாஸ்கரை விட சேவாக்கையும் அஸ்வின் தேர்வு செய்தார். இறுதியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் இருவரில் சச்சினை இந்தியாவின் சிறந்த பிளேயராக அஸ்வின் இறுதி செய்தார்.
முக்கியமான சுற்றில் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா இடையே தேர்வு செய்ய வேண்டியிருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், “மை காட், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு அப்சல்யூட் லெஜண்ட். அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஆனால் ஒரு பவுலராக எனது பார்வையில், இந்த முறை நான் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்கிறேன். ஒருவேளை இதில் என்னுடைய பவுலர் பார்வையின் பார்ஷியாலிட்டி கூட இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து எம்.எஸ். தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையிலான ஒப்பீட்டின் போது பேசுகையில், “ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ய மிகவும் டெம்ப்ட்டிங்காக இருந்தது. ஆனால் தோனியின் கேப்டன்ஷிப், ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் மிக முக்கியமானது. டீமை நம்பர் ஒன் ரேங்கிங்கிற்கு அழைத்துச் சென்றவர் என்பதால் நான் தோனியைத் தேர்வு செய்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.