துலீப் டிராபி போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறித்து பேசியுள்ளார். ஈஸ்ட் ஜோன் அணிக்காக விளையாடும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் இஷான் கிஷன் தனக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தது குறித்து “இஷான் பையா பெரிய ரிஸ்க் எடுப்பதாக நினைத்தார், ஆனால் நான் ஒரு விக்கெட் டேக்கர்” என்று கூறியிருக்கிறார்.
துலீப் டிராபி தொடரின் காலிறுதி போட்டியில் ஈஸ்ட் ஜோன் மற்றும் நார்த் ஈஸ்ட் ஜோன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. பேட்டிங்கில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி, பந்துவீச்சில் அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
நார்த் ஈஸ்ட் ஜோன் அணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஈஸ்ட் ஜோன் அணி போராடிய போது, கேப்டன் இஷான் கிஷன் வைபவ் சூர்யவன்ஷியிடம் பந்தை கொடுத்தார். சூர்யவன்ஷி தனது பகுதி நேர லெப்ட் ஆர்ம் ஸ்பின் பந்துவீச்ச மூலம் வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசி, ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இந்த சிறப்பான பந்துவீச்சு மற்றும் அணியின் வெற்றி குறித்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது “எந்தவொரு பேட்டரிடமும் கேட்டால் அவர்கள் பந்துவீச்சை மிகவும் விரும்புவார்கள். எதிரணியின் விக்கெட்டுகள் விழாததால் எனக்கு இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைத்தது. இஷான் பையா ஏதோ பெரிய ரிஸ்க் எடுப்பதாக நினைத்தார், ஆனால் நான் ஒரு விக்கெட் டேக்கர் என்பது அவருக்கு தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி “நான் ஐந்து விக்கெட் எடுத்தாலும் எனக்கு மூன்று ஓவர்கள் தான் கிடைக்கும் என்பது என் மைண்டில் இருந்தது. எனவே ஒரே ஸ்பாட்டில் சரியாக பந்துவீச வேண்டும் என்று நினைத்தேன். இந்த போட்டியில் பேட்டிங் சரியாக அமையாததால், பந்துவீச்சில் பங்களித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஃபன்னாகவும் இருந்தது” என்று கூறி முடித்துள்ளார்.