நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறது. மகேந்திர சிங் தோனி தலைமையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி சென்னை அணி வீரர்கள் தற்பொழுது பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
சென்னை அணியின் முக்கிய வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா அல்லது விளையாட மாட்டாரா என்கிற கேள்வி நேற்று வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
காயம் காரணமாக ஓய்வு எடுத்து வரும் ருத்ராஜ் கெய்க்வாட்
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருடைய கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் டி20 தொடரில் இருந்து வெளியேறினார்.
அது சம்பந்தமான சிகிச்சையை இதுநாள் வரையில் அவர் எடுத்து வந்தார். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக குணமடைந்து விடுவார் என்றும் நிச்சயமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் இடம் பெறுவார் என்றும் நம்பிக்கையுடன் கூறப்பட்டு வந்தது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்க தயாராகிவிட்ட ருத்ராஜ்
தற்பொழுது அவருடைய காயம் குறித்த கூடுதல் விவரம் நமக்கு கிடைத்துள்ளது. நமக்கு வந்த தகவலின் படி அவருடைய காயம் குணமடைந்து விட்டதாகவும் கூடிய விரைவில் சென்னை அணி வீரர்களுடன் அவர் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயமாக களமிறங்கி விளையாடப் போகிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
சென்னை அணிக்கு ருத்ராஜின் பங்களிப்பு
சென்னை அணிக்கு 2020 ஆம் ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி 204 ரன்கள் குவித்தார். பின்னர் கடந்த ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதம் உட்பட 635 ரன்கள் குவித்தார். கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற இவரது அதிரடி ஆட்டம் மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.
அதன் காரணமாகவே சென்னை அணி இவர் மீது நம்பிக்கை வைத்து 6 கோடி ரூபாய்க்கு மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆண்டு மீண்டும் விளையாட போகும் அவர் கடந்தாண்டை போலவே சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே சென்னை அணி ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக தற்பொழுது உள்ளது.