நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி அவர்களை 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய ரன் வித்தியாச வெற்றியாகவும், அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன் வித்தியாச தோல்வியாகவும் அமைந்தது.
இவருக்கு அர்ப்பணிக்கிறேன்
இந்த போட்டி குறித்து ருதுராஜ் பேசும்போது “நான் இந்த வெற்றியை முகேஷ் சௌத்திரிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவர் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்து வருகிறார். அவர் வீட்டு துயரமான சூழ்நிலையில் இருந்து திரும்பி வந்து விளையாடுவது கடினமானது. இந்த போட்டிக்கு முன்பாகவே நாங்கள் அவருக்காக போட்டியை வெல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டோம்”
“டாஸ் நேரத்தில் முதலில் பேட்டிங் செய்வதா இல்லை பந்து வீசுவதா என்பதில் நான் இரு மனநிலையில்தான் இருந்தேன். ஏனென்றால் ஆடுகளத்தில் கொஞ்சம் புல் இருக்கவும் செய்தது. அதே சமயத்தில் சில பகுதிகள் உலர்ந்தும் இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்ய வந்த பொழுது பந்து கொஞ்சம் ஆடுகளத்தில் நின்று வருவதாக கண்டோம்”
இவர் பந்துவீச்சு முக்கியம்
“இந்த ஆடுகளத்தை பயன்படுத்தி அகேல் உசைன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். மேலும் எங்களுக்கு பேட்டிங் நடு வரிசையில் கார்த்திக் சர்மா மற்றும் பிரிவிஸ் இருவரும் அடித்த தலா 20 ரன்கள் முக்கியமானதாக அமைந்தது. மேலும் பந்துவீச்சில் முகேஷ் தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினார். இடையில் வந்த மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்தார்கள்”
இதையும் படிங்க : நான் அப்படிங்கற ஆணவத்துல ஆடமாட்டேன்.. மும்பைக்கு என் மாஸ் பேட்டிங் பிளான் இதுதான் – சஞ்சு சாம்சன் பேட்டி
“நாங்கள் இங்கிருந்து மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும். மைதானத்தை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும். இன்னும் ஒரு நாளில் ஒரு போட்டி இருக்கிறது. நாங்கள் இந்த வெற்றியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு தயாராவது குறித்து பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






