2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் டபுள் ஹெட்டர் நாளான இன்று, இரண்டாவது போட்டியில், கே.எல்.ராகுலின் லக்னோ அணியும், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணியும், மும்பையின் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி முடித்திருக்கிறது.
முதலில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் பனிப்பொழிவை மனதில் வைத்து பந்தவீச்சை தேர்வு செய்ய, பேட் செய்ய வந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினார்கள். ஹெட்மயருக்கு க்ரூணால் கேட்ச் விட்டதால் அவர் மட்டுமே தப்பி பிழைத்தார். பிழைத்தவர் அஷ்வினை வைத்துக்கொண்டு லக்னோவை புரட்டி எடுத்துவிட்டார். முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் 165 ரன்களை எட்டியது.
பின்பு 166 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் கேப்டனை ஸ்டம்புகள் சிதற கோல்டன் டக்காக்கி அனுப்பினார் போல்ட். அதே ஓவரில் கிருஷ்ணப்பா கவுதமையும் போல்ட் வெளியேற்ற, ஆட்டத்தில் தீப்பற்றிக்கொண்டது.
போல்ட், பிரசித், அஷ்வின், சாஹல், புதுமுக குல்தீப் சென் என ஐந்து பவுலர்களும் அசத்த, 18-வது ஓவர் முடிவில், லக்னோவின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய பிரசித் 19 ரன்களை மார்க்ஸ் ஸ்டாய்னிசிற்கு விட்டுத்தர, கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட, ஆட்டம் பரபரப்பானது.
கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரர் குல்தீப் சென், முதல் பந்தில் ஒரு ரன்னை தந்து, அதற்கடுத்த மூன்று பந்துகளை டாட் ஆக்கி, வெற்றியைச் சிறப்பாக ராஜஸ்தான் பக்கம் எடுத்தே வந்துவிட்டார். கடைசி இரு பந்துகளில் பத்து ரன்களை தந்தாலுமே அது வெற்றியைப் பாதிக்கவில்லை.
What a win for Rajasthan Royals. Debutant Kuldeep Sen, just magnificent in the final over. pic.twitter.com/8KANmYB03G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2022
தற்போது ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ் கேப்பும் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரிடமே இருக்கிறது. அதிக விக்கெட் எடுத்தவருக்கான பர்பிள் கேப்பும் இப்பொழுது ராஜஸ்தான் வீரரான சஹாலிடமே வந்திருக்கிறது!