சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 18வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை படைத்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேற, மூன்றாவது வரிசை வீரர் படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு மிடில் வரிசையில் களமிறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் பட்டிதார் சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக சுழற் பந்துவீச்சில் அதிரடி தாக்குதல் நடத்தி 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இடையில் விராட் கோலி 30 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்து வெளியேற இறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 22 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திருப்பாதி 5 ரன், மற்றும் கேப்டன் ருத்ராஜ் ஆகியோரை வேகப்பந்துவீச்சாளர் ஹாசில் வுட் வெளியேற்றினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய தீபக் ஹூடா 4 ரன்னில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, ஷாம் கரன் 13 பந்துகளில் 8 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். 9 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன் மட்டுமே எடுத்து சென்னை அணித்தடுமாறியது.
இதையும் படிங்க:முதல் மேட்ச் 4.. 2வது மேட்ச் 3.. ஒவ்வொரு விக்கெட்டும் தங்கத்தின் எடை.. ஊதா தொப்பியை வாங்கிய சிஎஸ்கே வீரர்
அதற்குப் பின்னர் களம் இறங்கிய வீரர்களில் சிவம் தூபே 19 ரன் ரவீந்திர ஜடேஜா 25 ரன் எடுத்து ஆட்டம் இழக்க, தொடக்க ஆட்டக்காரர் ரவீந்தரா 41 ரன்னில் வெளியேறினார். பின்னர் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஓரளவு ஆறுதல் படுத்தினார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 8விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.