“2வது சூப்பர் ஓவரில் ரோகித்தை விளையாட அனுமதித்திருக்க கூடாது.. விதிப்படி தவறு” – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
491
Rohit

நேற்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி இரண்டு சூப்பர் ஓவர்கள் சென்று முடிந்தது.

இதன் காரணமாக ரசிகர்களும் சில புதிய கிரிக்கெட் விதிகளை தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உண்மையில் கிரிக்கெட்டில் இருக்கும் அனைத்து விதிகளும் வீரர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை.

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதல் சூப்பர் ஓவரின் ஐந்தாவது பந்தை விளையாடிய ரோஹித் சர்மா பந்துவீச்சாளர் முனைக்கு வந்து விட்டார். ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங் முனையில் இருந்தார்.

இந்த நேரத்தில் ரோகித் சர்மா தான் இரண்டு ரன்கள் ஓடுவதை விட, தன்னைவிட வேகமான ரிங்கு சிங் இரண்டு ரன்கள் ஓடுவது சரி என்று, ரிட்டயர்டு அவுட் முறையில் சென்று விட்டார். அதாவது தன்னை அவுட் என அறிவித்துக் கொண்டு வெளியில் சென்று விட்டார்.

இந்த நிலையில்தான் போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. பொதுவாக இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றால், முதல் சூப்பர் ஓவரில் ஆட்டம் இழந்த பேட்ஸ்மேனும், பந்து வீசிய பந்துவீச்சாளரும், பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யக்கூடாது என்பது விதியாக இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா இரண்டாவது சூப்பர் ஓவரில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

ரோகித் சர்மா ரிட்டயர்டு அவுட் ஆகாமல் ரிட்டயர்டு ஹர்ட் அதாவது காயத்தின் காரணமாக வெளியேறி இருந்தால் மட்டுமே மீண்டும் வந்து விளையாட முடியும். ஆனால் நேற்று ரோகித் சர்மா அப்படி காயம் காரணமாக வெளியேறியதாக தெரியவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரோகித் சர்மா நேற்று முதல் சூப்பர் ஓவரின் பேட்டிங் போது வெளியில் சென்றார். ஒருவேளை காயத்தின் காரணமாக சென்று இருந்தால் இரண்டாவது சூப்பர் ஓவரில் விளையாடலாம். ஆனால் அவர் ஆட்டம் இழந்து சென்று இருந்தார் என்றால் அவர் விளையாட முடியாது.

இதனால்தான் அவர் இப்படி வெளியே சென்றதும் நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த பொழுது அவர் மீண்டும் சூப்பர் ஓவர் வந்தால் வர முடியாது என்று கூறினேன்.

ஆனால் மீண்டும் திரும்பி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் வந்தார்கள். இது தவறு என்று நான் நினைத்தேன். நேற்று விதிகளின்படி இரண்டாவது சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவை பேட்டிங் செய்ய அனுமதித்திருக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.