இது எல்லாம் ஒரு பேட்டிங்..? சக வீரர்களை வெளுத்து வாங்கிய ரோகித்

0
641

இந்தியாவுக்கு எதிரான   முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த, கடைசி கட்டத்தில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை நமது அணி வீரர்கள் கோட்டைவிட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த போட்டி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா , வெற்றியின் அருகே வந்து தோற்றுவிட்டோம் என்று கூறினார். கடைசி விக்கெட்டுக்கு வங்கதேச வீரர்கள் நெருக்கடியை சமாளித்து விளையாடி வென்றார்கள் என்று பாராட்டினார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மீது தவறில்லை என்று குறிப்பிட்ட ரோகித், பேட்டிங்கில் தான் சொதப்பி விட்டோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பேட்டிங்கில் 25 ஓவர் கடந்த போது தாங்கள் 240 அல்லது 250 போன்ற ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தோம் என்று மேற்கொள் காட்டிய ரோகித் சர்மா, விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்ததால் நாங்கள் நினைத்த இலக்கை தொடவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆட்டத்தில் தங்களது வீரர்கள் கூடுதலாக 25 ரன்கள் அடித்திருந்தால் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு அளவுக்காவது உதவியாக இருந்திருக்கும் என்று வேதனை தெரிவித்த ரோகித் சர்மா இது போன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தங்களது வீரர்கள் கற்றுகொள்ள வேண்டும் என்று ரோகித் சர்மா கூறினார்.

இரண்டு பயிற்சி முகாம்கள் மூலம் அனைத்தையும் மாற்ற முடியாது என்று குறிப்பிட்ட ரோகித் சர்மா, பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் வைத்துக்கொண்டு சிறப்பாக பந்து வீசி நெருக்கடி அளித்தது. எனினும் கடைசி கட்டத்தில் சில சொதப்பல்களை செய்ததால் தான் தோல்வியை தழுவியது.

மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் இந்திய அணி வீரர்களால் நினைத்த அளவுக்கு பந்து வீச முடியவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக முற்றிலும் மாறியது. எனினும் இந்திய அணி வீரர்கள் கடைசி கட்டத்தில் ஒரு யாக்கர்கள் கூட வீசாமல் போனது தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் நோ பால்களை வீசியதும் வங்கதேசத்துக்கு சாதகமாக மாறியது. தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது.