இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தான் ஒரு கட்டத்தில் இனி கிரிக்கெட் விளையாடவே வேண்டாம் என முடிவு செய்ததாகவும், அதன் பிறகு தான் திரும்பி வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து ரோகித் சர்மா இருக்கிறார். ஐசிசி தொடர்களில் டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு தொடர்களை வென்ற இந்திய கேப்டனாக இருக்கிறார். மேலும் 2023 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்ற கேப்டன் ஆகவும் இருக்கிறார்.
ரோகித் சர்மா இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு தான் கிரிக்கெட்டில் இருந்து விலகிவிடலாம் என்று நினைத்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக திரும்பி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. வாழ்க்கை இத்துடன் முடிந்து விடாது என்று எனக்குத் தெரியும். இதெல்லாம் எனக்கு ஒரு பாடம். நடந்த எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு திரும்பி வருவது எப்படி என கற்றுக் கொண்டேன்”
“பிறகு அடுத்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் வர இருப்பதால் அதில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்தேன். இப்போது இதைச் சொல்வது மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதை அப்பொழுது செய்வதற்கும் மிகவும் கடினமாக இருந்தது”
இதையும் படிங்க: ஐபிஎல் ஓனருக்காகவே டி20 டீம்ல கில்லுக்கு இடம் தந்தாங்க.. இங்க நடக்கிறது எல்லாமே இதுதான் – அதுல் வாஸன் பேச்சு
“ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டை இனி விளையாட வேண்டாம் என்று நான் உண்மையிலேயே நினைத்தேன். ஏனென்றால் என் உடலில் இருந்த எல்லா சக்தியையும் அது எடுத்துக் கொண்டது. என்னுள் எதுவுமே இல்லாதது போல நான் உணர்ந்தேன். ஆனால் நான் காதலித்த விளையாட்டுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் வந்தேன்” என்று கூறியிருக்கிறார்.