“கேப்டன் கோலிய நான் நீக்கல.. ஆனா ரோகித் சர்மாக்கு மட்டும் இத செஞ்சேன்” – சௌரவ் கங்குலி ஓபன் டாக்

0
1445

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்த கேப்டன்களில் மிகவும் முக்கியமானவர் விராட் கோலி. அவர் ஐசிசி தொடர்களில் பெரிய வெற்றிகளை பெறாத கேப்டனாக இருந்தாலும் கூட, இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்கிற அளவுக்கு அணியின் தகுதியை உயர்த்தியவர்.

மிக முக்கியமாக இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சாளர்களை உருவாக்குவதிலும் அவர்களை தொடர்ந்து ஆதரிப்பதிலும் முதன்மையாக இருந்த கேப்டன். அவரது கேப்டன்சி காலத்தில்தான் இந்திய வேகபந்துவீச்சாளர்கள் இந்திய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு சுழற் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்துதான் இது நடந்தது.

- Advertisement -

மேலும் விராட் கோலி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு வீரர்களின் உடல் தகுதி என்பது மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஒரு வீரர் கொஞ்சம் பார்மில் இருந்தால் கூட அவர் உடல் தகுதியில் இல்லை என்றால் அணியில் சேர்க்க மாட்டார்கள் என்கின்ற நிலை உருவானது. இந்திய கிரிக்கெட்டில் இது அப்பொழுது மிகவும் புதுமையான விஷயம்.

இப்படியான நிலையில்தான் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பை ஏற்றதும், விராட் கோலிக்கும் அவருக்கும் இடையே மெல்ல உரசல்கள் ஆரம்பித்ததாக மீடியாக்களில் தொடர்ச்சியாக செய்திகள் வர ஆரம்பித்தது.

இதை உறுதி செய்தும் விதமாக 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை முடிந்து கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்தார். அவர் தற்பொழுது நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பினார். ஆனால் கங்குலி அவரை அப்படி இருக்க விடாமல் வெளியேற்றினார் என்கின்ற செய்திதான் இதுவரையில் நம்பப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து தற்பொழுது கூறியுள்ள கங்குலி ” நான் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கவில்லை. நான் இதை பலமுறை சொல்லி இருக்கிறேன். அவருக்கு டி20 இந்திய அணிக்கு தலைமை வகிக்க விருப்பமில்லை. அவர் இந்த முடிவுக்கு வந்த பிறகு மொத்தமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வது நல்லது என்று நான் அவரிடம் சொன்னேன். வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து இரண்டுக்கும் தனித்தனி கேப்டன்கள் இருக்கவும் சொன்னேன்.

ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பை ஏற்க நான் கொஞ்சம் தள்ளிவிட்டேன். காரணம் அவர் மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்க விருப்பம் இல்லாதவராக இருந்தார். இந்த விஷயத்தில் மட்டுமே எனக்கு பங்களிப்பு இருக்கிறது. ஆனால் நிர்வாகம் யார் என்ன செய்தாலும், களத்தில் செயல்படுபவர்கள் வீரர்கள்தான். இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக வாரிய தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டேன். இது ஒரு சிறிய பகுதி அவ்வளவுதான்!” என்று கூறி இருக்கிறார்!