இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட காத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மிகவும் மோசமாக தோல்வி பெற்று இந்திய அணி வந்துள்ளது. எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் இந்திய அணி தோல்வியுடன் நாடு திரும்பியுள்ளது. காயம் காரணமாக ரோகித் பங்கேற்காத இந்த தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். மோசமான கேப்டன் பொறுப்பு மற்றும் அணி தேர்வுக்காக ராகுல் டிராவிட் மற்றும் கேஎல் ராகுல் இருவருமே அதிகமாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் கேப்டனாக கலந்துகொள்கிறார். வழக்கமான கேப்டன் விராட் கோலி ஒருநாள் தொடரில் கேப்டன் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ரோகித் முதல் முறையாக முழு நேரக் கேப்டனாக ஒரு நாள் தொடரில் களமிறங்க உள்ளார். இந்த தொடருக்கு முன்னதாக வழக்கமாக நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அதில் முக்கிய கேள்வியாக டெஸ்ட் போட்டிகளிலும் நீங்களே கேப்டனாக இருப்பீர்களா என்று ரோஹித்திடம் கேட்கப்பட்டது. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய கேப்டன் யார் என்று பிசிசிஐ அறிவிக்காமல் உள்ளது. இதன் காரணமாக இந்த கேள்வியை ரோகித் முன் எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் கூறிய பதில் பலரை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விருப்பமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் அதற்கு இன்னமும் நேரம் இருக்கிறது என்று கூறியுள்ளார். தற்போது தன்னுடைய முழு கவனமும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தான் இருக்கிறது என்றும் வேலைப்பளுவை சரியாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்றும் ரோகித் பேசியுள்ளார். கேப்டனான முதல் ஒருநாள் தொடரிலேயே மிகவும் புத்தி கூர்மையுடன் ரோகித் பதிலளித்த இந்த வாதத்தை ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இப்போதே இந்திய அணி ஒருநாள் தொடர்களில் அதிகம் பங்கேற்று பயிற்சியை மேற்கொள்ள உள்ளது. புது கேப்டன் மற்றும் புது பயிற்சியாளரின் கீழ் இந்திய அணி எப்படி எங்கே போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இந்தத் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.