“சிஎஸ்கே அணிக்கு ரோகித் சர்மா வருகிறாரா?” – சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

0
7065
Rohit

ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டதில் இருந்து, விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை உடனடியாக கேப்டனாக அறிவித்து, மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மாவை நீக்கி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர கொடுத்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இதில் கொதிப்படைந்து, கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், மும்பை இந்தியன் சமூக வலைதள பக்கங்களில் பின் தொடர்வதை நிறுத்தி வெளியேறி வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இந்தப் பிரச்சனைகள் ஓய்வதற்கு முன்பாகவே, பிரபல கிரிக்கெட் விமர்சகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பும்ரா இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட இருக்கிறார்கள் என்கின்ற தகவலை பரப்பினார்கள்.

இதை நம்புவதற்கும் கொஞ்சம் வாய்ப்பு இருந்தது. எனவே இதை வைத்து சமூக வலைதளங்களில் நிறைய யூகங்கள் மற்றும் வதந்திகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன. இது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைகள் சிறகு விரித்தன.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இதற்கு உண்மையை உடைத்து நேரடியான பதிலை சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் எந்த ஒரு அணியிடம் இருந்தும் வீரரை டிரேடிங் செய்ய நினைக்கவில்லை. நாங்களோ அல்லது எந்த ஒரு அணியோ எங்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை. குறிப்பாக நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டிரேடிங் குறித்து பேசவில்லை. மேலும் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து எந்த வீரர்களையும் வாங்க விரும்பவில்லை!” என்று உண்மையை உடைத்து பேசியிருக்கிறார். அவரது இந்த பதிலால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் ரோகித் சர்மா குறித்து பேசி உள்ள மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறும்பொழுது “ஹர்திக்கை கேப்டனாக்குவதற்கு முன்பாக நாங்கள் மூத்த வீரர்களிடம் பேசினோம். இது ஒரு மாற்றத்திற்கான கட்டம். மும்பை இந்தியன்ஸ் முன்னேறி செல்ல முடிவு செய்தது. கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா அருமையாக இருந்தார். ஆனால் இது எதிர்காலத்தை பார்க்க வேண்டிய நேரம்.

இது சம்பந்தமாக நான் வலைதளங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அர்த்தம் கிடையாது. கேப்டன் மாற்றத்தை மும்பை இந்தியன்ஸ் நன்றாகவே கையாண்டது.

எங்கள் ரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இதை எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம். இதை நாம் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!