இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று துவங்க உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொஞ்சம் கோபமடைந்து பதில் அளித்திருக்கிறார்.
இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடி ஒன்றுக்கு நான்கு என இழந்தது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு துவங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பை இதற்கு கொண்டார். அதில் பும்ராவின் உடல் தகுதி மற்றும் யார் அணியின் விக்கெட் கீப்பர் என்பது குறித்தான மிக முக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதில் அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு அவர் கொஞ்சம் கோபமான முறையில் பதில் அளித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா ” என்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றி நான் இங்கு பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்? இப்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை எனக்கு இருக்கின்றன. இதில்தான் முழுக்க என்னுடைய கவனம் தற்பொழுது இருக்கிறது. அறிக்கைகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதை தெளிவுபடுத்திக் கொண்டு எல்லாம் இருக்க முடியாது. தற்போது முன்னால் இருக்கும் இரண்டு தொடர்களை விளையாடி முடித்து என்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றி முடிவு செய்வேன்”
“பும்ரா உடைய காயம் எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்கேன் செய்ய வந்திருக்கிறார். இந்த அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்த பிறகு, பும்ரா எந்த மாதிரியான உடல் தகுதியில் இருக்கிறார் என்பது குறித்து நான் உங்களுக்கு சொல்ல முடியும்”
இதையும் படிங்க : டாக்ஸி டிரைவரால் கூட கம்பீர் ரோகித்துக்கு பிரச்சனை வரும்.. இந்த விஷயத்தை செஞ்சே ஆகணும் – ரவி சாஸ்திரி பேட்டி
“கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக எங்களுக்கு பலகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் 15 போட்டிகளை எடுத்துக் கொண்டால் அவர் நல்ல முறையில் அணிக்கு தேவையான வகையில் விளையாடியிருக்கிறார். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். அவரையும் நாங்கள் விட்டுவிட முடியாது. இரண்டு வீரர்களுமே வெல்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். இந்த இடத்தில்தான் நாங்கள் ஒரே அணியாக நிற்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.