இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவை விட தான் குறைந்த சம்பளத்திற்கு விளையாட ஒப்பு கொண்டதற்கான காரணம் குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்று ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு 10 அணிகளும் தங்களின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் சரியாக மாலை 5:30 மணி அளவில் அனைத்து அணிகளும் தங்களுடைய தக்க வைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.
இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு அதிக சம்பளமாக 18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த இரண்டு இடங்களில் வரும் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் தலா பதினாறு புள்ளி 35 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் தக்கவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 16.30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இளம் திலக் வர்மா 8 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார். சூரியகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியாவை விட ரோஹித் சர்மா 5 லட்ச ரூபாய் குறைவான சம்பளம் பெறுகிறார்.
இது குறித்து பேட்டி அளித்திருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது “உங்களுக்கு தெரியும் நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால் தற்போது நான் தக்கவைக்கப்பட்டிருக்கும் இடம் சரியானதாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்திய அணியை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வீரர்கள் அதிக அளவில் சம்பளத்தில் முன்னுரிமை பெற வேண்டும். இதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. 10 அணிகளின் கையில் இருக்கும் மீதி பணம்.. பஞ்சாப் உச்சம்.. முழுமையான பட்டியல்
“மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மும்பையில் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த இடம் இதுதான். எனவே இந்த நகரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. இதன் காரணத்தால் நான் இங்கிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நீங்கள் ஒரு அணியுடன் நீண்ட காலம் விளையாடும் பொழுது நிறைய நினைவுகளை உருவாக்குகிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.