கோப்பையை கொண்டு வருவோம்னு சொல்லாமல், வித்தியாசமாக பேசிய ரோகித் சர்மா! – அட்டவணை அறிவித்தபின் அளித்த பேட்டியில் என்ன சொன்னார்?

0
2023

உலகக்கோப்பை அட்டவணை வெளியிட்ட பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணி எப்படியான அணுகுமுறையை கையாளப்போகிறது? மற்றும் ரசிகர்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்கிறேன்! என்று பேட்டியளித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதியை துவங்கிய நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. போட்டிகளுக்கான அட்டவணை நேற்றைய தினம் மும்பையில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் சரியாக 100 நாட்களே இருக்கின்றன. அதற்குள் இந்திய அணி எப்படிப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்படும். இந்தியாவிற்கு மீண்டும் கோப்பையை பெற்றுதருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 12 வருடங்கள் ஆகிறது. மேலும் ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கடைசியாக, 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை பெற்றதுடன் சரி. அதன்பின் நான்கு முறை செமி பைனல், நான்கு முறை பைனல் என்று ஐசிசி நடத்தும் தொடர்களில் நன்றாக செயல்பட்டு இருந்தாலும் கோப்பை இல்லாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளது தான் நம் வரலாறு.

12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் 50 ஓவர் உலக்கோப்பை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இந்திய அணிக்காக ரோகித் சர்மா தலைமையிலான அணி கோப்பையை பெற்றுத்தரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

அதேநேரம் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. இவரது தலைமையில் இந்திய அணி இதுவரை ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று, டி20 உலக கோப்பையில் அரை இறுதி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்று தோல்வியை சந்தித்து கோப்பை இல்லாமல் வெளியேறியுள்ளது.

ஆகையால் வருகிற 50 ஓவர் உலகக்கோப்பையில் எப்படி செயல்படுவார்? ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமாக இருப்பதைப் போல, இந்திய அணியிலும் நன்றாக வழிநடத்தி உலகக்கோப்பை பெற்றுத் தருவாரா? என்கிற பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் ரோகித் சர்மாவின் முன்பு தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இப்படி ஒரு சூழலில், நேற்றைய தினம் உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியிட்ட பிறகு அது குறித்து பேட்டி அளித்த ரோகித் சர்மா, இந்த உலக கோப்பையில் இந்திய அணி எப்படிப்பட்ட அணுகுமுறையுடன் களமிறங்கும்? என்பது குறித்தும் பேசினார்.

“உலகக்கோப்பையை சொந்த மைதானத்தில் விளையாடும் அனுபவத்தை பெறப்போகிறேன் என்று நினைக்கும்பொழுது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் உலககோப்பையையை ஆடுகிறோம். ரசிகர்கள் நாங்கள் விரைவில் மைதானத்திற்குள் வரவேண்டும் என்று ஆவலுடன் இருப்பது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

பல அணிகள் முன்பை விட சிறப்பாகவும் ஆக்ரோஷமாகவும் கிரிக்கெட் போட்டிகளை அணுகுகிறார்கள். இதனால் மிகவும் போட்டி மனப்பான்மை நிறைந்ததாக இந்த உலகக்கோப்பை இருக்கும். இது உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் சிறந்த கண்டுகளிப்பை கொடுக்கும்.

நாங்கள் எங்களுடைய பெஸ்ட் கொடுப்பதற்கு கடுமையாக முயற்சி செய்வோம். இந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தை வாழ்வில் மறக்க முடியாததாக மாற்றுவோம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.” என ரோகித் சர்மா பேசினார்.