இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்து இரண்டு விதமான முடிவுகள் எடுத்தால் தான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசும் பொழுது தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட மகேந்திர சிங் தோனிதான் விக்கெட் கீப்பராக மிக வேகமான கைகளைக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதோடு அவர் பேட்டிங் வரிசையில் என்ன மாதிரியான இடத்தில் வருவார் என்றும் பேசியிருக்கிறார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது 43 வயதான போதிலும் கூட அவருடைய பவர் ஹிட்டிங் அப்படியே இருக்கிறது. சிஎஸ்கே அணியை இரண்டாக பிரித்து போட்டியில் கூட பதிரனா பந்துவீச்சில் ஹெலிகாப்டர் ஷாட் முறையில் அட்டகாசமான சிக்ஸர் அடித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி தாக்குதல் பேட்டிங் திறமை இன்னும் அப்படியே தொடர்கிறது.
மேலும் விக்கெட் கீப்பராக அவருடைய தனித்தன்மை என்பது பந்தைப் பிடிக்கும் பொழுது கையைப் பின்னே எடுத்துச் செல்ல மாட்டார். பந்தை கை இருக்கும் இடத்திலேயே பிடித்து, உடனுக்குடன் ஸ்டெம்பை நோக்கி வருவார். இதன் காரணமாக யாரும் எதிர்பார்க்காத மின்னல் வேக ஸ்டெம்பிங்களை அவர் செய்திருக்கிறார். அவருடைய இந்த வேகம் இன்னுமே தொடர்ந்து வருகிறது.
இது குறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது ” இந்த முறை தோனி பேட்டிங் வரிசையில் 7 அல்லது 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்று நான் நினைக்கிறேன். இந்த இடங்களில் அவர் மீண்டும் புத்திசாலித்தனமாக இருப்பார். முன்பு போல 12 அல்லது 20 பந்துகளுக்குள் விளையாடும் அளவுக்கு வருவார். இங்கு அவருடைய பேட்டிங் அணுகுமுறை நல்ல தாக்கத்தை கொடுக்கும்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025 இந்த 4 டீம் பிளே ஆப் போகும்.. சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு இல்ல – ஏபி டிவில்லியர்ஸ் கணிப்பு
“தோனிக்கு விளையாட்டு மீதான காதலும் குறையவில்லை அவருடைய உடல் தகுதியும் குறையவில்லை. தற்போதும் அவர் ஸ்டெம்ப்களுக்கு பின்னால் மிக வேகமான கைகளைக் கொண்டிருக்கிறார். இப்படி எல்லாம் இருக்கும் பொழுது அவர் இன்னும் நான்கு சீசன் விளையாடினாலோ இல்லை இந்த சீசன் உடன் ஓய்வை அறிவித்தாலோ நான் எதற்குமே ஆச்சரியப்பட மாட்டேன். அவரால் இன்னுமே விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.