ஐசிசி விதிப்படி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான்? களத்தில் என்ன நடந்தது? காரணம் என்ன?

0
9674
Rizwan

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு வந்திருந்த இங்கிலாந்து அணி அந்த டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது!

இதற்கு அடுத்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் பாபர் ஆஸம் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். நீண்ட மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் கான் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான அணி 438 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி டாம் லதம் மற்றும் கேன் வில்லியம்சன் சதத்துடன் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 440 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்.

இன்று மூன்றாவது நாள் தொடக்கத்தில் சிறிது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் களத்திற்கு பீல்டிங் செய்ய வரவில்லை. இந்த காரணத்தால் இந்த போட்டியில் விளையாடாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மாற்று வீரராக களத்திற்கு வந்ததோடு கேப்டன்சி செய்தார்.

இதை கவனித்த நடுவர் தலையிட்டு அவரை கேப்டன்சி செய்யக்கூடாது என சுட்டிக்காட்டினார். பிறகு ரிஸ்வான் இது குறித்து நடுவர்களிடம் முறையிட நடுவர்கள் காரணம் என்னவென்று அவருக்கு விளக்கினார்கள்.

- Advertisement -

காரணம் என்னவென்றால், மாற்று வீரராக வந்த ஒருவர் பீல்டிங் செய்ய எந்த தடையும் இல்லை. அதே சமயத்தில் அவர் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என்றால் நடுவரிடம் அனுமதி பெற்று செயல்படலாம். ஆனால் மாற்று வீரராக வரும் ஒருவர் கேப்டனாக களத்தில் செயல்பட அனுமதி கிடையாது. ஐசிசி விதி 24.1.2 படி இது அனுமதிக்கப்படாத ஒன்றாகும். இந்த விதியை நடுவர்கள் சுட்டிக்காட்ட இதற்குப் பிறகு முன்னாள் கேப்டன் சர்பராஸ் கான் களத்தில் கேப்டனாக செயல்பட்டார். பிறகு கேப்டன் பாபர் களத்திற்கு வந்தார்!