நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் துவக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூரியவன்சி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து வெற்றி பெற வைத்தார்கள். இது குறித்து கேப்டன் ரியான் பராக் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி வெறும் 14 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். பும்ரா ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இறுதிவரை நின்று விளையாடிய ஜெய்ஸ்வால் 32 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இவர்கள் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது பலமான அணி
நடப்பு தொடரில் மூன்று போட்டிகளில் மூன்றையும் வென்று புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளும் வலிமையாக உள்ளது. மினி ஏலத்தின் சிறப்பாக செயல்பட்டு எல்லா ஓட்டைகளையும் அடைத்திருக்கிறார்கள்.
இது குறித்து கேப்டன் ரியான் பராக் பேசும் பொழுது “மூன்றுக்கும் மூன்று போட்டியையும் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மினி ஏலத்தின் போது இந்த அணி வலிமையானது என்று நான் உணர்ந்தேன். அணியில் எல்லா இடங்களுக்கும் தேவையான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எல்லாத் துறைகளும் சிறப்பாக இருக்கிறது”
சிறந்த ஓபனர்கள் இவர்களே…
“வைபவ் மற்றும் ஜெய்ஸ்வால் குறித்து சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. எங்கள் தொடக்க ஜோடி ஐபிஎல் தொடரில் எங்கு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தான் சிறந்த தொடக்க ஜோடி என்ற இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரிடமும் இருக்கும் திறமை மிகவும் அதிகம்”
இதையும் படிங்க : பும்ரா ஓவரை அடிக்க சொல்லி சூரியவன்சிக்கு நான் தான் சொன்னேன்.. அவரால் எனக்கு இந்த நன்மை கிடைக்குது – ஜெய்ஸ்வால் பேட்டி
“வைபவ் வெறுமனே பந்தை அடித்துக் கொண்டிருப்பவர் கிடையாது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கண்டிஷனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி அவர் விளையாடினார். ஜெயஸ்வால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வகையில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர்களின் வயதும் அதில் இவர்களுக்கு இருக்கும் முதிர்ச்சியையும் வைத்து பார்க்கும் பொழுது இவர்களே சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று இந்த ஐபிஎல் தொடரில் நினைக்கிறேன்” எனக்கூறி இருக்கிறார்.






