” பண்ட் மிகவும் குண்டாக இருக்கிறார் ; அது அவருக்கு உதவாது ” – ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு

0
56
Danish Kaneria about Rishabh Pant

தற்பொழுது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்கள் 2-2 என இரு அணிகளுக்கும் சமநிலையில் முடிந்திருக்க, கோப்பையைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி, இன்று இரவு ஏழு மணிக்குப் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் தொடங்க இருக்கிறது!

ஐ.பி.எல் முடிந்து கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்ட காரணத்தால், இந்தத் தொடருக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடருக்கு முன்பே தொடரை விட்டு விலகியதால் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இளம் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தும் ரிஷாப் பண்ட்டின் கேப்டன்சியை விட, அவரது பேட்டிங்தான் இப்போது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. காரணம், முதல் நான்கு ஆட்டங்களிலும் ஒரே மாதிரியான தவறை செய்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார். நிலைமை இப்படியே போனால் ரிஷாப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்படுவார் என இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்து இருந்தார். அதேசமயத்தில் தென் ஆப்பிரிக்காவின் லெஜன்ட் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினோ தினேஷ் கார்த்திக்கைதான் வருகின்ற டி20 உலகக்கோப்பைக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தேர்வுசெய்ய வேண்டும். ரிஷாப் பண்ட் தவறுகளைத் திருத்திக்கொள்வதாய் தெரியவில்லை என்று ஒருபடி மேலேபோய் விமர்சிக்கிறார்.

ஒருபுறம் ரிஷாப் பண்ட்டின் கேப்டன்சி தாண்டி அவரது பேட்டிங் பார்ம் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் வேளையில், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனீஷ் கனேரியா, வேறொரு வகையான விமர்சனத்தை முன்வைத்து அதிர வைத்திருக்கிறார்.

அதில் டேனீஷ் கனேரியா கூறியுள்ளதாவது “ரிஷாப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் பற்றி நான் பேச விரும்புகிறேன். நான் ஒன்றைக் கவனித்தேன், அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் பொழுது, கால் கட்டை விரலை ஊன்றி அமர்வதில்லை. அவர் அதிக எடையோடு பருமனாக இருப்பதால் வேகமாக செயல்பட முடியாது. இதெல்லாம் அவரது உடற்தகுதி குறித்த கவலையை எழுப்புகிறது. அவர் 100% உடற்தகுதியுடன் இருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே முன்னாள் வீரர்கள் பலரும் அவரது பேட்டிங் பார்ம் குறித்துப் பெரிய அளவில் பேசிவரும் நிலையில், தற்பொழுது அவரது விக்கெட் கீப்பிங்கும், உடற்தகுதியும் விமர்சனத்திற்கு வருவது, அவருக்கு மென்மேலும் நெருக்கடியையே உருவாக்கும். இதிலிருந்து மீண்டு இன்றைய ஆட்டத்தில் ரிஷாப் பண்ட் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய அணி கோப்பையை வென்றால், அவருக்கு மிகப்பெரிய ஒரு விடுதலையாய் அமையும்!