தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 21 மாதங்கள் கழித்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரிஷப் பண்ட் அதிரடி சதம் அடித்து தோனியின் மெகா சாதனையை சமன் செய்து அசத்தியிருக்கிறார்.
இந்திய அணி இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நேற்று மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களத்தில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களத்தில் நின்றார்கள். இன்று மூன்றாவது நாளில் திரும்பி வந்து இருவருமே அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் காட்டிய பொறுப்பு
நேற்று போட்டியின் முடிவு நேரத்தில் விராட் கோலி விக்கெட்டை இந்திய அணி இழந்திருந்தது. இதன் காரணமாக இன்று களத்திற்கு வந்த இரண்டு இந்திய பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் நிதானம் காட்டி விளையாட வேண்டி இருந்தது. அதற்கு தகுந்தார் போல் முதல் 15 ஓவர்களில் மிகவும் பொறுப்பாக நிதானம் காட்டி விளையாடினார்கள்.
இந்த நிலையில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பான அரை மணி நேரத்தில் திடீரென கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடிக்கு இறங்கினார்கள். இது கொஞ்சமும் எதிர்பார்க்காத பங்களாதேஷ் அணியால் அவர்களை எப்படி தடுப்பது என்றே தெரியவில்லை. சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தார்கள்.
தோனியின் மெகா சாதனை சமன் :
இந்த நிலையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 124 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் தன்னுடைய ஆறாவது சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து 128 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ரிஷப் பண்ட் இந்த அதிரடி சதத்தின் மூலமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்து இருந்த மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 33 அரை சதங்கள் உடன் 38 ரன் ஆவரேஜில் 4876 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : எனக்கு இங்க ஒரு ஃபீல்டிங்கை வை.. பங்களாதேஷ் கேப்டனை தெறிக்க விட்ட ரிஷப் பண்ட் – களத்தில் நடந்த சுவாரசியம்
அதே சமயத்தில் ரிஷப் பண்ட் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் உடன் 43 ரன் ஆவரேஜில் 2271 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பராக தோனியின் சாதனையை 57 போட்டிகள் குறைவாக விளையாடி ரிஷப் பண்ட் சமன் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக மாபெரும் சாதனைகளை படைப்பார் என்பது உறுதி!