ரிஷப் பண்ட் அபார சதத்தால் 8 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றுள்ள இந்தியா ! கேப்டனாக ரோஹித் ஷர்மா பல சாதனைகள் படைப்பு

0
290
Rishabh Pant century

இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிக வெற்றிக்கரமானதாய் அமைந்திருக்கிறது. டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தும், டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-1 எனவும் வென்று அசத்தி இருக்கிறது!

சுற்றுப்பயணத்தின் இறுதி தொடராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி நூறு ரன்கள் வித்தியாசத்திலும் வென்றன. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.

இன்று தொடரை யாருக்கென்று நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி மான்ஸ்செஸ்டர் ஓல்ட் டிராப்போர்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பும்ராவிற்குப் பதிலாய் முகமத் சிராஜ் இடம்பெற்று இருந்தார். டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ரன் இல்லாமல் சிராஜ் ஓவரில் வெளியேறினார்கள். கேப்டன் ஜாஸ் பட்லர் 60, துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 41 என அடிக்க, ஐம்பது ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து, 45.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கும் ஆரம்பம் அதிர்ச்சியாகவே அமைந்தது. ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி மூவரும் 38 ரன்களுக்குள் வெளியேறினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் 72 ரன்களுக்குள் வெளியேறினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா இருவரும் 133 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஹர்திக் பாண்ட்யா 55 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதிவரை நின்ற ரிஷாப் பண்ட் சதமடித்து 125 [113] அணியை 42.1 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார். இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.

இந்த வெற்றியின் மூலம் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. அதே நேரத்தில் இதுவரை டி20, ஒருநாள் தொடரை சேர்த்தி இங்கிலாந்து மண்ணில் முதன் முறையாக இந்திய அணி வென்றிருக்கிறது. இப்படி வென்ற முதல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.

மேலும் வெளிநாடுகளில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட்டின் சாதனைகள் தொடர்கிறது. வெளிநாடுகளில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்திருக்கிறார். டெஸ்ட் – 159* ரன், ஒருநாள் போட்டி – 125* ரன், டி20 – 65* ரன்!