இன்று இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெல்வதற்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெடி இருவரது பார்ட்னர்ஷிப் இருந்தது. இது குறித்து ரிங்கு சிங் பேசியிருக்கிறார்.
இன்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 41 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் 59 பந்துகளில் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நிதிஷ் குமார் ரெட்டிக்கு பிறகு வந்தாலும் கூட ரிங்கு சிங் உள்ளே வந்ததும் ஆடுகளத்தை கணித்து அதற்கேற்றவாறு அதிரடியாக ஆட ஆரம்பித்து விட்டார். அப்பொழுது நிதிஷ் குமார் ரெட்டி பொறுமையாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து மகமதுல்லாஹ் ஓவரில் ஒரு ஃப்ரீ ஹிட் கிடைக்கவும் அங்கிருந்து நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டம் சூடு பிடித்தது.
இதற்கு அடுத்து மிகவும் புத்திசாலித்தனமாக ரிங்கு சிங் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்காக தன்னுடைய ஆட்ட வேகத்தை குறைத்துக் கொண்டார். அதே சமயத்தில் நிதிஷ் குமார் ரெட்டி வெளியேறியதும் ரிங்கு சிங் வேகமாக அரை சதத்தை பூர்த்தி செய்தார். இன்று நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்கள், ரிங்கு சிங் 29 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள்.
இதுகுறித்து ரிங்கு சிங் கூறும் பொழுது “கடினமான நேரத்தில் அமைதியாக இருக்கவும் பந்தை நேராக அடிக்கவும் நான் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். நீண்டகாலமாக இந்த இடத்தில் விளையாடி வருகின்ற காரணத்தினால் எனக்கு இது பழகிவிட்டது. மேலும் இதற்காக நானும் பயிற்சி செய்கிறேன். இத்துடன் பினிஷிங் ரோல் பற்றி தோனி பாய் உடன் பேசியது எனக்கு நிறைய உதவி செய்கிறது. நீங்கள் சீக்கிரத்தில் மூன்று நான்கு விக்கெட்டுகள் இழக்கும் பொழுது மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 86 ரன் வித்தியாசம்.. டி20-ல் புது வரலாறு.. இந்திய அணி பங்களாதேசை வீழ்த்தி தொடரை வென்றது
“இன்று ஆடுகளம் சற்று மெதுவாக இருந்த காரணத்தினால் நான் நிதிஷ் குமார் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க விரும்பினேன். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து தவறான பந்துகளை தண்டிக்க விரும்பினோம். நிதிஷ் குமாருக்கு கிடைத்த அந்த ஃப்ரீ ஹிட்டுக்கு பிறகு எல்லாம் மாறியது. அவர் அந்தப் பந்தில் சிக்சர் அடித்து உத்வேகம் பெற்றார். அங்கிருந்து அதிரடியாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.